இலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

தினகரன்  தினகரன்
இலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து திணறி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (83.2 ஓவர்). ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 86 ரன் (132 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். நிகோல்ஸ் 42, ராவல் 33, லாதம் 30, போல்ட் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட், சுரங்கா லக்மல் 4 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 93.2 ஓவரில் 267 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. டிக்வெல்லா 61, குசால் மெண்டிஸ் 51, ஏஞ்சலோ மேத்யூஸ் 50, லக்மல் 40, கேப்டன் கருணரத்னே 39 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 5, சாமர்வில்லி 3, போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்துள்ளது. லாதம் 45, நிகோல்ஸ் 26, சவுத்தீ 23, சான்ட்னர் 12 ரன் எடுத்தனர். வில்லியம்சன் 4 ரன்னில் வெளியேறினார். வாட்லிங் 63 ரன் (138 பந்து, 5 பவுண்டரி), சாமர்வில்லி 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்டெனியா 4, தனஞ்ஜெயா டி சில்வா 2, அகிலா தனஞ்ஜெயா 1 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க, நியூசிலாந்து அணி 177 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை