நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது:ஜூலை மாதத்தில் ஏற்றுமதி, 2.25 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது:ஜூலை மாதத்தில் ஏற்றுமதி, 2.25 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறையும் நான்கு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.



நாட்டின் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த கணக்கீட்டு மாதத்தில், ஏற்றுமதி வளர்ச்சி, 2.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை, நான்கு மாதங்களில் இல்லாத வகையில், 1,343 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.ஏற்றுமதி, 2,633 கோடி டாலராக அதிகரித்துள்ளது.



இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 2,575 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி, 10.43 சதவீதம் சரிந்து, 3,976 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.எண்ணெய், தங்கம் உள்ளிட்ட, அனைத்து பொருட்கள் இறக்குமதியும் குறைந்ததை அடுத்து, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான, வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.



தங்கம் இறக்குமதி



நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையானது, கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில், 1,863 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.இதற்கு முன் குறைந்த அளவாக, கடந்த மார்ச் மாதத்தில், 1,089 கோடி அமெரிக்க டாலராக வர்த்தகப் பற்றாக்குறை இருந்தது.தங்கம் இறக்குமதி, ஜூலை மாதத்தில், 42.2 சதவீதம் சரிந்து, 171 கோடி டாலராக குறைந்துள்ளது. எண்ணெய் இறக்குமதியும், 22.15 சதவீதம் சரிவு கண்டு, 960 கோடி டாலராக குறைந்துள்ளது.எண்ணெய் அல்லாதவை, 5.92 சதவீதம் சரிந்து, 3,016 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.



ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ஜூலை மாதத்தில் பல துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, ரசாயனம், இரும்புத் தாது, மின்னணுவியல், கடல் பொருட்கள், மருந்துகள் துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.இருப்பினும், சில துறைகளில் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, பொறியியல் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் துறைகள் சரிந்துள்ளன.ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, 0.37 சதவீதம் குறைந்து, 10 ஆயிரத்து, 741 கோடி அமெரிக்க டாலராகவும், இறக்குமதி, 3.63 சதவீதமாகவும் குறைந்து உள்ளது.



வர்த்தக கொள்கை



ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாதத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 5,939 கோடி டாலராக குறைந்து உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வர்த்தகப் பற்றாக் குறை, 6,527 கோடி டாலராக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேற்சொன்ன 4மாதங்களில், எண்ணெய் இறக்குமதி, 5.69 சதவீதம் குறைந்து, 4,445 கோடி டாலராக இருந்தது.இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், 4,713 கோடி டாலராக இருந்தது.



நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ள நிலையில், இதுகுறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயல், ‘டுவிட்டர்’ மூலம் குறிப்பிட்டு உள்ளதாவது: அரசின் செயல்திறன் மிக்க வர்த்தக கொள்கைகள் மற்றும் தேவையான ஆதரவு ஆகியவற்றின் விளைவாக, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, 2018 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019 ஜூலையில், 28 சதவீதம் குறைந்துள்ளது.அதேசமயம், வர்த்தக ஏற்றுமதி, 2,633 கோடி அமெரிக்க டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை