ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம்

ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் படிவமான, ‘படிவம் – 9’ நாட்டில் இதுவரை, 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை, மூன்று மாதம்; ஆறு மாதம் என, போன்ற காலகட்டங்களில் கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஆண்டு முழுவதுக்குமான தாக்கலுக்கு, படிவம் – 9 என ஒன்று உள்ளது.இதை, அனைத்து வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது. இருப்பினும் இதுவரை, இந்தியா முழுவதிலும், 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அல்லது வணிகர்கள், படிவம் – 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.விற்றுமுதல், 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பின், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ பயன்படுத்த வேண்டும்.கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான படிவத்தை தாக்கல் செய்ய, பலமுறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



தற்போது, 31ம் தேதியுடன், இந்த அவகாசம் நிறைவடைகிறது.ஆனால், இந்தியா முழுவதும் இதுவரை, 20 சதவீத நிறுவனங்களே, படிவம் – 9ஐ தாக்கல் செய்துள்ளன.இந்த படிவம் தாக்கல் செய்த பின், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, விளக்கம் கோர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை