உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி

மும்பை: உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணியின் சில வீரர்கள் மட்டுமே இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி உள்ளனர். ஆனால், அணியில் பல மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

உலக கோப்பை போட்டியில், இந்திய அணி ஏன் அரையிறுதியில் தோற்றது? தோனியை 7வது இடத்தில் எதற்காக களம் இறக்கினீர்கள்? போன்ற பல்வேறு கேள்விகளை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்டது.

விவகாரம் இப்படி இருக்கையில், உலகக் கோப்பை தொடருக்காக 45 நாட்கள் பதவி நீட்டிப்பு பெற்றிருந்த ரவி சாஸ்திரியை, தற்போது பதவியிலிருந்து நீக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆனால், மீண்டும் அவர் தலைமை பயிற்சியாளருக்கான பதவியில் விண்ணப்பிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருந்தும் ரவி சாஸ்திரியுடன், பவுலிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் ஆகியோருக்கான இடத்திற்கும் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.



அணி மேலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக அணி கேப்டனாக இருந்த சுனில் சுப்ரமணியன் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அதனால், உலக கோப்பை அணியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்ய, பிசிசிஐ  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அணிக்கு இனி 2 கேப்டன்?

இந்திய கிரிக்கெட் அணியில், கேப்டன் விராட் கோஹ்லிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

அதனால், இந்திய அணியில் இனி இரண்டு கேப்டன் முறையை செயல்படுத்த, பிசிசிஐ யோசித்து வருவதாக தெரிவிக்கின்றன. இதற்காக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாகவும், விராட் கோஹ்லி டெஸ்ட், டி-20 கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக்க நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக வினோத் ராய் தலைமையில், உலககோப்பை தொடரின் தோல்வி குறித்தும், மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அதேநேரம் ஒருநாள் போட்டியில் வெற்றிக்கேப்டனாக ஜொலித்த தோனியிடமே, கேப்டன் பதவியை வழங்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


.

மூலக்கதை