முதல் தோல்வி | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
முதல் தோல்வி | ஜூலை 11, 2019

ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய 7 முறையும் வெற்றி பெற்றிருந்தது. நேற்று முதன் முறையாக அரையிறுதியில் வீழ்ந்தது.

27

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 27 ஆண்டுக்குப் பின், இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் (மெல்போர்ன்) நடந்த 1992 தொடர் பைனலில் பாகிஸ்தானிடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து.

பின்ச் சோகம்

ஆஸ்திரேலியாவின் பின்ச் சந்தித்த முதல் பந்தில் அவுட்டானார். உலக கோப்பை அரையிறுதியில், முதல் பந்தில் ‘டக்’ அவுட்டான முதல் கேப்டன் என்ற மோசமான சாதனை படைத்தார் பின்ச்.

3

ஸ்மித், கேரி நான்காவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், உலக கோப்பை அரையிறுதியில், 100 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த 3வது ஆஸ்திரேலிய ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன், மைக்கேல் பெவன்–ஸ்டூவர்ட் லா (எதிர்– விண்டீஸ், 1996), பின்ச்– ஸ்மித் (எதிர்– இந்தியா, 2015) ஜோடி இதுபோல எடுத்தது. 

50

உலக கோப்பை தொடரில் 100 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த 50வது ஆஸ்திரேலிய ஜோடி என்ற பெருமை ஸ்மித்– கேரிக்கு கிடைத்தது. 

ரூட் அசத்தல்

நேற்றைய போட்டியில், கம்மின்ஸ் பந்தை இங்கிலாந்தின் ரூட் கேட்ச் பிடித்தார். இதன் மூலம், ஒரே உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் (12) பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 2003ல் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 11 கேட்ச் பிடித்தார்.

* உலக கோப்பை அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில், ரூட் (19) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் (28) உள்ளார். 

27

நேற்றைய போட்டியில், முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் மட்டும் எடுத்தது. இது, நடப்பு தொடரில் முதல் ‘பவர் பிளே’ ஓவரில் பதிவான இரண்டாவது குறைந்தபட்ச ரன். முதலிடத்தில் இந்திய அணி (எதிர்– நியூசி., 24 ரன், மான்செஸ்டர்) உள்ளது.

ரத்தம் கொட்டியது

ஆர்ச்சர் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்து, ஆஸ்திரேலியாவின் கேரி ‘ஹெல்மெட்டில்’ கடுமையாக தாக்கியது. வலது பக்க தாடையில் காயம் பட்டு ரத்தம் வழிந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்ட கேரி பேட்டிங்கை தொடர்ந்தார். மீண்டும் ரத்தம் வழிந்து கொண்டிருந்த போதும் 46 ரன் எடுத்தார். 

சச்சின் சாதனை சமன்

கடந்த 2015ல் நடந்த உலக கோப்பை காலிறுதி (65 ரன்), அரையிறுதி (105), பைனலில் (56*) ஸ்மித் அரை சதம் எட்டி இருந்தார். நேற்றும் அரை சதம் விளாசினார். இதன் மூலம், உலக கோப்பை ‘நாக் அவுட்’ போட்டிகளில்  தொடர்ந்து நான்கு அரை சதம் எட்டிய வீரர் என்ற சாதனையை, இந்திய ஜாம்பவான் சச்சினுடன் பகிர்ந்து கொண்டார்.

 

 

 

மூலக்கதை