பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி : அசத்தினார் அஜாஸ் பட்டேல்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி : அசத்தினார் அஜாஸ் பட்டேல்

அபு தாபி : பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கடுமையாகப் போராடிய நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 153 ரன்னும், பாகிஸ்தான் 227 ரன்னும் எடுத்தன. 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 249 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது. கை வசம் 10 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 139 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இமாம் உல் ஹக் 25, முகமது ஹபீஸ் 8 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர்.இமாம் 27, ஹபீஸ் 10, ஹரிஸ் சோகைல் 4 ரன்னில் வெளியேறினர். அசார் அலி - ஆசாத் ஷபிக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்க்க, பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. எனினும், நியூசி. வீரர்கள் மனம் தளராமால் போராடினர். ஷபிக் 45 ரன் (81 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வேக்னர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் பிடிபட்டார். பாபர் ஆஸம் 13 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாக, நியூசிலாந்து உற்சாகமடைந்தது. ஒரு முனையில் அசார் அலி நங்கூரம் பாய்ச்சி நிற்க, கேப்டன் சர்பராஸ் அகமது 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பிலால் ஆசிப், யாசிர் ஷா, ஹசன் அலி ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான், 164 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கடைசி விக்கெட்டுக்கு முகமது அப்பாஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அசார் அலி விடாப்பிடியாகப் போராடினார்.வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அசார் 65 ரன் எடுத்து (136 பந்து, 5 பவுண்டரி) அறிமுக சுழல் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, பாகிஸ்தான் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (58.4 ஓவர்). பத்து பந்துகளை சந்தித்த அப்பாஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி நம்ப முடியாத வகையில் வெற்றியை வசப்படுத்தி 1-0 என முன்னிலை பெற்றது. அந்த அணியின் அறிமுக வீரர் அஜாஸ் யூனுஸ் பட்டேல் (30 வயது, மும்பையில் பிறந்தவர்) 23.4 ஓவரில் 4 மெய்டன் உட்பட 59 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். சோதி, வேக்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஜாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டெஸ்ட் துபாயில் 24ல் தொடங்குகிறது.

மூலக்கதை