ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 : ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியா பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 : ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியா பலப்பரீட்சை

கயானா: மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதி வருகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 3 ஆட்டங்களிலும் அபாரமாக வென்று தலா 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில், இரு அணிகளும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. தனது 3வது போட்டியில் நேற்று முன்தினம் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 52 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியில் தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 51 ரன், ஸ்மிரிதி மந்தனா 33 ரன் விளாச, இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய பந்துவீச்சில் ராதா3, தீப்தி 2, பூனம், ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மித்தாலி ராஜ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் சவாலை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ஆஸி. அணி ரன்ரேட் அடிப்படையில் (2.946) முதலிடம் வகிக்கிறது. இந்தியா (1.634) 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுகின்றன. ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தொடர்ச்சியாக மூன்று முறை வென்று சாதனை படைத்துள்ளது (2010, 2012, 2014) குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை