உரையாற்றவுள்ள மஹிந்த! நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

PARIS TAMIL  PARIS TAMIL
உரையாற்றவுள்ள மஹிந்த! நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
 
அத்துடன், மஹிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. 
 
இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
 
“புதிதாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
 
இந்த நிலையில், நாங்கள் அரசாங்கத் தரப்பு ஆசனங்களில் அமர்ந்து கொள்வோம்.
 
எமக்கு அரசாங்க தரப்பு ஆசனங்களை சபாநாயகரும், நாடாளுமன்ற பணியாளர்களும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்று நம்புகிறோம்.” என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
 
அதேவேளை, பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற முடியாது என்று ஐதேகவின் மற்றொரு தலைவரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
”நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத மகிந்த ராஜபக்சவும், அவரது தரப்பினரும், இன்று ஆளும்கட்சி வரிசையில் அமரமுடியாது.
 
அரசியலமைப்பின் 48-2 பிரிவுக்கு அமைய, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமையால் பிரதமர் பதவியிழந்து விட்டார். இந்த பின்னணியில் மகிந்த ராஜபக்ச, பிரதமர் என்ற வகையில் உரையாற்றுவது சட்டவிரோதம்.
 
அவ்வாறு அவர் உரையாற்ற முனைந்தால் நாடாளுமன்றத்துக்குள் எதிர்ப்பு வெடிக்கக் கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
இதனால் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் பெரும் குழப்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேவேளை, ஆசனங்கள் தொடர்பான முடிவை சபாநாயகரே எடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மூலக்கதை