இன்னும் கட்டுக்கடங்காத காளை

தினமலர்  தினமலர்
இன்னும் கட்டுக்கடங்காத காளை

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?

அதிபர் தேர்தல் நடந்து, சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறும். நம்ம ஊர் இடைக்கால தேர்தல் போன்றது அல்ல இது. இது அந்த நாட்டின் பிரதிநிதிகள் சபை எனப்படும், கீழவைக்கும் (லோக்சபா போன்றது), செனட் எனப்படும் மேலவைக்கும் (ராஜ்யசபா போன்றது) நடைபெறும் தேர்தல்.இரண்டு ஆண்டுகளில், அதிபர் எடுக்கும் பல்வேறு முடிவுகள், பின்பற்றும் கொள்கைகள் ஆகியவற்றுக்கான தராசாகவே, இடைக்காலத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், டொனால்டு டிரம்பின் செயல்திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் மக்கள்ஆதரவு இருக்கிறதா என்பதை, ஊடகங்களும் விமர்சகர்களும் தெரிந்து கொள்ள விரும்பினர். மக்கள் தெளிவாக ஓட்டளித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டனர்.கீழவையில், டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்குத் தான் அங்கே செல்வாக்கு. அதிக உறுப்பினர்கள். மேலவை என்ற, செனட்டில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள டிரம்ப், தாம் பெரும் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்.உண்மையில், பிரதிநிதிகள் சபை என்பது தான் மக்கள் அவை. 435 உறுப்பினர் களை கொண்ட அந்த சபையில், இந்தக் கட்டுரைஅச்சுக்குப் போகும் தருவாயில், 225 இடங்களை ஜனநாயகக் கட்சியும், 197 இடங்களை டிரம்பின் குடியரசுக் கட்சியும் பெற்றுள்ளன.

நுாறு இடங்களைக் கொண்ட செனட்டில், 51 இடங்களை குடியரசுக் கட்சியும், 44 இடங்களை ஜனநாயகக் கட்சியும் பெற்றுள்ளன.உடனடியாக டிரம்புக்கு பெரும் ஆபத்து இல்லை. அதாவது பெருமளவு மக்கள் ஆதரவு சரிந்துவிடவில்லை. அடுத்த அதிபர் தேர்தலான, 2020 வரை, எந்தப் பிரச்னையும் அவருக்கு இல்லை.

ஆனால், இத்தனை ஆண்டுகளும் கீழவையில், குடியரசுக் கட்சிக்குக் கிடைத்து வந்த ஆதரவு இனி கிடைக்கப் போவதில்லை. ஜனநாயகக் கட்சியினர், டிரம்புக்கு, ‘செக்’ வைக்கப் போவது நிச்சயம்.

என்ன பலன்?

இங்கிருந்து தான் சுவாரசியமே ஆரம்பிக்கிறது. பொதுவாக இடைக் காலத் தேர்தலில், தங்கள் கட்சி, பெரும்பான்மையை இழக்குமானால், அதிபர்கள் உஷாராகி விடுவர். தங்கள் செயல் திட்டங்கள், கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள ஆரம்பிப்பர். மக்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யத் தயங்குவர். ஏனெனில், அடுத்த முறை மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கும் போது, பொதுமக்கள் ஆதரவு வேண்டுமல்லவா?ஆனால், டிரம்ப் வித்தியாசமானவர்; அடுத்த தேர்தல் பற்றி அவர் கவலைப்பட்டாற் போல் தெரியவில்லை.

இன்னும் சொல்ல போனால், இந்தத் தேர்தலில்,அவர் மேற்கொண்ட பிரசாரமே வித்தியாசமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது, வரிச் சலுகைகளை ஏராளமாக வழங்கியிருக்கிறார், வேலை வாய்ப்பின்மை பெருமளவு குறைந்திருக்கிறது. பொதுவாக, இத்தகைய சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பது தான், அரசியல்வாதிகள் பழக்கம்.

ஆனால், இந்த மனுஷனோ, இவற்றையெல்லாம் பெரிசாக எடுத்துச் சொல்லவே இல்லை. மாறாக, எதிர்மறை பிரசாரமே மேற்கொண்டார். எதிர்க்கட்சிகளை, ‘சாத்தான்’கள் என்றார். வெறுப்புணர்வும், பிரிவினையும், பகையுணர்வுமே அவரது பேச்சுக்களில் வெளிப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர் பேசிய பேச்சுக்களுக்கு கிடைத்த வரவேற்பு இப்போது கிடைக்கவில்லை. மக்கள் மனம் மாறியிருப்பது, அவர்கள் போட்ட ஓட்டுகளிலிருந்தே தெரிந்துவிட்டது. டிரம்புக்கு ஒருவகையில் இது நிச்சயம் அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

மாற்றம் என்ன?

மக்கள் தெளிவாக கொடுத்திருக்கும் சவுக்கடியால் என்ன மாற்றம் ஏற்படும்?பிரதிநிதிகள் சபையில், இனி இவரது திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் அவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் கிடைக்காது. ஒவ்வொரு கட்டத்திலும் அது விவாதத்துக்குள்ளாகும். அமெரிக்காவே முதல் என்ற அடிப்படையில், இவர் பிற நாடுகள் மீது விதிக்கும் பொருளாதாரத்தடைகள், வரிகள் ஆகியவற்றுக்கு ஆதரவு கிடைக்காது.

சீனா கொஞ்சம் மூச்சு விட்டுகொள்ளலாம். எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாம். வர்த்தகப் போர் என்ற அபாயம், படிப்படியாக தளர்ந்து போகலாம்.அமெரிக்காவில் செய்யப்படும் இறக்குமதிகள் மீதான வரிகள் கொஞ்சம் நெகிழ்ந்து கொடுக்கலாம்.மிக முக்கியமானது,

குடியேற்றக் கொள்கை. டிரம்ப் வந்தபின், எச்.1.பி விசா வழங்குவதில் கடுமை காட்டத் துவங்கிவிட்டார். நம்முடைய பல, ஐ.டி., நிறுவனங்களால், அங்கே இந்தியர்களை அனுப்பி பணி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அதேபோல், எச்.1.பி. விசா பெற்று பணியாற்றுபவரின் மனைவி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட, எச்.4 விசாக்களை திரும்பப் பெற திட்டம் இருப்பதாகவும், டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிறக்கும், வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க குடியுரிமையை இனி வழங்க வேண்டுமா என யோசிப்பதாகவும், டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்தகைய மோசமான, பாதகமான குடியேற்றக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள, அமெரிக்கா விலக்கு அளித்துள்ள, எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இப்போதைக்கு, இது நிம்மதி அளித்தாலும், இதே நிலை தொடருமா என்பது சந்தேகம் தான். ஆனாலும், தற்சமயம், டிரம்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவால், நம்மை அதிகம் இம்சைப் படுத்த மாட்டார் என்று நம்புவோம்.

முரட்டு காளை

தேசியவாதம், பாதுகாப்பு வாதம், எதிர்க்கட்சிகள் மீது வெறுப்புவாதம் ஆகியவற்றைப் பேசி அதிபர் ஆனவர் டிரம்ப். அவரது கொள்கைகளுக்கு இணக்கமாக இருந்தது பிரதிநிதிகள் சபை. இனி, அங்கே ஜனநாயக கட்சியினர் பெருமளவு வந்துவிட்டதால், நிச்சயம் மோதல் ஏற்படும். அவர்கள் ஒருசில திட்டங்களை முன்வைத்து, அதிபர் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அவற்றை செனட்டில் நிராகரிக்க டிரம்புக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஜனநாயகக் கட்சி, ஐரோப்பிய பாணி தாராளவாத சிந்தனைகளால் நிரம்பியது. டிரம்பின் மோதல் தேசியவாதம் அங்கே கொஞ்சம் முட்டிக் கொண்டு நிற்கலாம். மக்கள் தன் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்ற உண்மை, இன்னும் டிரம்புக்கு உறைத்தாற்போல் தெரியவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளும், அவர் கட்டுக்கடங்காத காளையாகவே அலைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

மூலக்கதை