ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

கயானா: மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மரூஃப் 53 ரன்களும், நிடா டார் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பூனம் யாதவ், ஹேமலதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மித்தாலி ராஜ் - மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கம் தந்தது. இறுதியில் இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய மித்தாலி ராஜ் 56 ரன்களையும்,  மந்தனா 26 ரன்களையும் விளாசி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மூலக்கதை