கடத்தல், போலி பொருட்களால் தொழில் துறை பாதிப்பு: பிக்கி

தினமலர்  தினமலர்
கடத்தல், போலி பொருட்களால் தொழில் துறை பாதிப்பு: பிக்கி

புதுடில்லி:சட்ட விரோத கடத்தல் மற்றும் போலி பொருட்களால், இந்திய தொழில் துறை, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்திப்பதாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான – பிக்கி தெரிவித்துஉள்ளது.


இக்கூட்டமைப்பு, அதன், கடத்தல் மற்றும் போலி பொருட்கள் தடுப்பு பிரிவின் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவது, போலிப் பொருட்கள் விற்பனை போன்றவை, அனைத்து நாடுகளுக்கும் பெரும் பிரச்னையாக உள்ளன.இத்தகைய வர்த்தகம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8 -– 15 சதவீத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.


கடத்தல் சாதனங்கள் மற்றும் போலிப் பொருட்களால், இந்திய தொழில் துறை பாதிக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்தும் உள்ளது.ஏழு துறைகள்வாகன உதிரிபாகங்கள், மதுபானங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், புகையிலை, மொபைல்போன் ஆகிய ஏழு துறைகள், பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.


இத்துறைகள், ஆண்டுக்கு, 1 லட்சத்து, 5,381 கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.கடத்தல் மற்றும் போலி பொருட்களால், அரசின் வரி வருவாயும் குறைகிறது. ஏழு துறைகளில், 39 ஆயிரத்து, 239 கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக, கணிக்கப்பட்டுள்ளது.அதிக வரி விதிப்பு, 'பிராண்டு' பொருட்கள் மீதான மோகம், போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவற்றால், கடத்தல் மற்றும் போலி பொருட்களுக்கு, அதிக வரவேற்பு காணப்படுகின்றன.சந்தையின் தேவையை விட, அசல் பொருட்களின், ‘சப்ளை’ குறைவாக இருப்பதும், குறைந்த விலையில் போலி பொருட்கள் கிடைப்பதையும், காரணமாக கூறலாம்.கடத்தல் மற்றும் போலி பொருட்களை தடுக்க, போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததும், அவற்றின் புழக்கத்திற்கு வழிவகுக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

மூலக்கதை