நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் :மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ்’ ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் :மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ்’ ஆய்வறிக்கை

புதுடில்லி:‘வட்டி உயர்வு, தேவை குறைவு போன்றவற்றால், வரும் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான – ‘மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ்’ ஆய்வில் தெரியவந்து உள்ளது.


இந்நிறுவனம். 2019 -– 20ம் ஆண்டுக்கான, உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பொருளாதாரம், பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது.இதன் அறிகுறியாக, நடப்பாண்டு, ஜனவரி – ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், இந்திய பொருளாதாரம், 7.9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.


இது, முழு ஆண்டில், 7.4 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கிஇந்நிலையில், இந்தாண்டு, ரிசர்வ் வங்கி, தலா, 0.25 சதவீதம் என, இரு முறை, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தியுள்ளது. மேலும், உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கியின் கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, வட்டி விகிதம் உயர்ந்து, கடன் செலவு அதிகரித்துள்ளது.


இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை உயர்த்தினால், உள்நாட்டு தேவைப்பாடு பெரிதும் குறையும்.கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால், நுகர்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.இதனால், மக்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து, பிற பொருட்கள் வாங்குவதை தள்ளிப் போடுவர். மக்களின் நுகர்வு குறையும் என்பதால், அடுத்த சில ஆண்டுகளில், இந்திய பொருளாதார வளர்ச்சியும் குறையும்.


எனினும், இந்திய பொருளாதார வளர்ச்சியின் தேக்கத்திற்கு, நிதித் துறை பிரச்னைதான் அதிக பங்கு வகிக்கும் என, தெரிகிறது.வங்கி சாரா நிதித் துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு, தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அவை, கடன்களுக்காக செய்யும் ஒதுக்கீடு குறையும்.சரிவுதற்போது, நிதித் துறையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், குறுகிய கால அளவில், வங்கி மற்றும் வங்கிசாரா துறைகளின் கடன் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தகைய ஆய்வுகள் அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்தாண்டை விட, அடுத்த ஆண்டு, 0.1 சதவீதம் குறைந்து, 7.3 சதவீதமாக சரியும். இதே சரிவு நிலை, 2020ம் ஆண்டிலும் நீடிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டும், நடப்பாண்டும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, தலா, 3.3 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், சில காலம் நீடிக்கும் என, தெரிகிறது. இதன் தாக்கம், சர்வதேச வர்த்தக வளர்ச்சியை பாதிக்கும். அதனால், 2019 மற்றும் 2020ல், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, தலா, 2.9 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது–எம்.ஐ.எஸ்.,

மூலக்கதை