2வது டி20ல் அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா

தினகரன்  தினகரன்
2வது டி20ல் அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில், 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.ஏகனா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், ஷிகர் தவான் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 123 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. தவான் 43 ரன் எடுத்து (41 பந்து, 3 பவுண்டரி) ஆலன் பந்துவீச்சில் பூரன் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த ரிஷப் பன்ட் 5 ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். லோகேஷ் ராகுல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியைத் தொடர்ந்த ரோகித் ஷர்மா சர்வதேச டி20ல் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. ரோகித் 111 ரன் (61 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ராகுல் 26 ரன்னுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பியரி, ஆலன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. ஹோப், ஹெட்மயர் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஹோப் 6 ரன் எடுத்து கலீல் வேகத்தில் கிளீன் போல்டானார். ஹெட்மயர் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஓரளவு தாக்குப்பிடித்த டேரன் பிராவோ 23 ரன்னில் வெளியேறினார். பூரன் 4, போலார்டு 6, ராம்தின் 10 ரன்னில் அணிவகுக்க, ஆலன் முதல் பந்திலேயே ரன் அவுட்டானார். 2 சிக்சருடன் 21 பந்தில் 20 ரன் எடுத்த கீமோ பால் புவனேஷ்வர் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். பியரி 1 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் 15 ரன், தாமஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர், கலீல் அகமது, பூம்ரா, குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆட்டமிழக்காமல் 111 ரன் விளாசிய கேப்டன் ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னையில் 11ம் தேதி நடைபெறுகிறது. கோஹ்லியை முந்தினார் ரோகித்...சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில், விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் ரோகித் ஷர்மா. லக்னோ போட்டியில் 111* ரன் விளாசிய அவர் இதுவரை 2,203 ரன் குவித்துள்ளார் (சராசரி 33.89). கோஹ்லி 2,102 ரன் (சராசரி 48.88) எடுத்துள்ளார். சர்வதேச அளவில் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (2,271 ரன்) முதலிடத்தில் உள்ளார்.* சர்வதேச டி20ல் 4 சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமை ரோகித் வசமாகி உள்ளது. * இந்திய அணி தொடர்ச்சியாக 7வது டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

மூலக்கதை