முதன்முறையாக முழுப்போட்டிக்கு கேப்டனாக இருப்பதால் ஆசிய கோப்பையை தக்க வைக்க பாடுபடுவேன் : ரோகித் சர்மா சவால்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதன்முறையாக முழுப்போட்டிக்கு கேப்டனாக இருப்பதால் ஆசிய கோப்பையை தக்க வைக்க பாடுபடுவேன் : ரோகித் சர்மா சவால்

துபாய்: துபாயில் நடந்து வரும்   ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்க பாடுபடுவேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
. ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட்டின் முதன்மை இடத்தை பெறும் நாடு எது என்பதை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபி நகரங்களில் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை இழந்த நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா இதில் பங்கேற்கிறது. மேலும் அதிரடி பேட்ஸ்மேன், கேப்டன் கோலி இல்லாமல் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் கலந்து கொள்கிறது.

ஆட்ட சுமை காரணமாக கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

கோலி இல்லாத சூழலை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளும் எனத் தெரியாத நிலையில், ரோஹித் சர்மா, தோனி, தவான் போன்ற மூத்த வீரர்களும், இளம் வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்னை, தோனிக்கு இணை வீரர் போன்றவை அணி நிர்வாகத்தை கவலை கொள்ளச் செய்துள்ளன.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி புத்துணர்வு பெற்று எழுச்சியுடன் காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மொஹமது ஆமீர், ஆல்ரவுண்டர் ஹாசன் அலி, தொடக்க வீரர் பாகர் ரஹ்மான், பாபர் ஆஸம், ஹாரிஸ் சோஹைல் போன்றவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள்.

அவர்களை எதிர்கொள்வது இந்திய அணிக்கு சிக்கலாக இருக்கும். மேலும் இந்தியாவைக் காட்டிலும், பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியுள்ளது.

சொந்த மைதானம் போல் விளங்குவது அதற்கு கூடுதல் பலமாகும். இது குறித்து ரோகித் நிருபர்களிடம்  கூறியதாவது: வரும் 2019 மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடக்கிறது.



அதற்கு ஒவ்வொரு நாடும் சரியான அணியை அனுப்ப தான் முனையும். இதற்கு தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் சிறந்த வாய்ப்பாக உள்ளன.

ஒவ்வொரு அணியும் இத்தகைய வாய்ப்பை பெறும். எனினும் முதலில் ஆசிய கோப்பை போட்டியில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

இதர அணிகளின் பலம், பலவீனங்களை போட்டியின் இடையே அறிந்து கொள்வோம். உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்காக வீரர்கள் காத்திருக்கின்றனர்.

சரியான அணியை இதன் மூலம் கட்டமைக்க முடியும். இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதே எனக் கேட்டபோது, அது வழக்கமாக நடைபெறும் ஆட்டங்களில் ஒன்றை போல் தான் கருத வேண்டும்.

கோப்பையை தக்க வைக்கவே கவனம் செலுத்துவோம், முதன்முறையாக நான் முழு போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்வை தருகிறது. வானிலை கவலை தரும் அம்சமாக உள்ளது.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை