தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு

ஜகார்தா: இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு பரிசுத் தொகையாக அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் அறிவித்துள்ளது.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,300 வீரர்கள், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது. இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர்.

36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வாங்கிய முதல் தங்கம் இதுவாகும்.



பஜ்ரங் முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சிரோஜிடினை 13-3 என வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். காலிறுதி சுற்றில், தஜிகிஸ்தானின் ஃபேய்ஸி அப்துல்கோசிமை எதிர்கொண்டார்.

அதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி விளையாடிய பஜ்ரங் புனியா, 12-2 என அப்துல்கோசிமை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் பஜ்ரங், ஜப்பானின் டைசி டகாடனியை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இறுதியாக 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். தங்கம் வென்ற பஜ்ரங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:  ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

.

மூலக்கதை