‘கோஹ்லி மற்றும் கோ ரொம்ப மோசம்’ லார்ட்ஸ் தோல்விக்கு கடும் விமர்சனம்: வறுத்தெடுக்கும் சீனியர்கள், ரசிகர்கள்

தினகரன்  தினகரன்
‘கோஹ்லி மற்றும் கோ ரொம்ப மோசம்’ லார்ட்ஸ் தோல்விக்கு கடும் விமர்சனம்: வறுத்தெடுக்கும் சீனியர்கள், ரசிகர்கள்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கேப்டன் கோஹ்லி, சக வீரர்களை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வறுத்தெடுத்துள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்னில் வெற்றியை பறிகொடுத்த இந்திய அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் படுமோசமாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 289 ரன் பின்தங்கிய நிலையில் நேற்று முன்தினம் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். அஷ்வின் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 33 ரன் சேர்க்க இந்திய அணி 2வது இன்னிங்சில் வெறும் 130 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் டக் அவுட்டான துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், 2வது இன்னிங்சிலும் டக் அவுட். தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களை வெறுப்பேற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. படுதோல்வி அடைந்த இந்திய அணியின் செயல்பாடு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவக் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய அணியின் மிகமோசமான செயல்பாடு இது. நமது அணி நன்றாக விளையாடாத சமயத்தில், நாம் அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு துணை நிற்க வேண்டுமெனதான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், வெற்றிக்காக கொஞ்சம் கூட போராடாததை பார்த்த போது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இதிலிருந்து மீட்டு வரும் நம்பிக்கையும், மன வலிமையும் நம் வீரர்களுக்கு இருக்குமென நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.முகமது கைப் கூறுகையில், ‘‘தோல்வியை தவிர்க்க போராடுவதில் மந்தமாக இருந்த செயல்பாடுதான் கவலை அளிக்கிறது. எந்த பேட்ஸ்மேனும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடவில்லை’’ என்றார். விவிஎஸ்.லட்சுமணன் தனது பதிவில், ‘‘நமக்கு சாதகமில்லாத தட்பவெப்பநிலையில், எதிரணியின் பந்துவீச்சை கணிக்கத் தவறிய இந்திய அணி வீரர்கள் முயற்சியே இல்லாமல் தோற்றுள்ளனர். இந்த  தோல்வியிலிருந்து பாடம் கற்று, விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும்’’ என அறிவுரை கூறி உள்ளார்.‘‘அதிர்ச்சியில் இருந்து மீளுங்கள். சிறந்த ஆட்டத்தை கொடுங்கள்’’ என சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார். இதுதவிர பல்வேறு மீடியாக்களும் இந்தியாவின் தோல்வியை ‘அவமான தோல்வி’, ‘படுபாதாள  பேட்டிங்’ என விமர்சித்துள்ளன. இந்த டெஸ்டில் இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் கொஞ்சமும் பொறுப்புடன் விளையாடவில்லை, அதிகம் நம்பிய புஜாரா ஏமாற்றி விட்டார் என வர்ணணையாளர்களும் விமர்சித்துள்ளனர். இது, கேப்டன் கோஹ்லி அன்ட் கோக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தோல்விக்கு குறித்து கூறிய கேப்டன் கோஹ்லி, ‘‘பெருமை கொள்ளும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் முதல் முறையாக மோசமாக செயல்பட்டுள்ளோம். போட்டியில் விளையாடும் போது, வானிலையை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. வானிலை மாற்றத்திற்கு ஏற்ப, வியூகம் வகுப்பது குறித்தெல்லாம் உட்கார்ந்து யோசிக்க முடியாது. சில சமயம் புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் கூட பந்துவீச்சு எடுபடாமல் போகலாம். எனவே வானிலையை காரணம் காட்ட விரும்பவில்லை. அணி வீரர்கள் தேர்வில் தவறு செய்து விட்டோம். இப்போட்டியில் இங்கிலாந்தின் இடைவிடாத தாக்குதலால் தோற்று விட்டோம். மீண்டு வருவோம்’’ என்றார். இதற்கிடையே 3வது டெஸ்ட் போட்டி வரும் 18ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.முரளிக்கு ஸ்பெஷல்நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 2 டெஸ்டில் முறையே 20, 6, 0, 0 ரன் மட்டுமே எடுத்துள்ளார். மோசமான துவக்கமும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. எனவே, மற்ற பேட்ஸ்மேன்களை விட முரளி விஜயை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சற்று அதிகமாகவே கிண்டலடித்துள்ளனர். ‘இவரை முதலில் அணியிலிருந்து வெளியேற்றுங்கள்’ என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.இவரையும் விடவில்லைஅணி வீரர்களை தவிர அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் விட்டு வைக்கவில்லை. ‘கிரேக் சேப்பலை விட ரவிசாஸ்திரி மோசமானவர்’ என டிவிட்டரில் பலரும் விமர்சித்துள்ளனர். ‘‘திறமையான நபரை பயிற்சியாளராக்குங்கள்; வெறும் காற்றடைத்த பைகள் வேண்டாம்’’ என கூறி உள்ளனர். ‘‘பந்து ஸ்விங் ஆகும் களத்தில் நம் வீரர்கள் விளையாட முடியவில்லை. இருந்தும் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். பந்துவீச்சே எடுபடாத இலங்கை, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் மட்டுமே நம் அணி வெல்கிறது’’ என்று கூறி உள்ளனர்.அஷ்வின் கேப்டன்?லார்ட்ஸ் டெஸ்டின் 2வது இன்னிங்சில் கோஹ்லி முதுகுவலியால் அவதிப்பட்டார். எனவே அடுத்த டெஸ்டுக்குள் அவர் தயாராவாரா என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. ஒருவேளை கோஹ்லி இல்லாவிட்டால் துணை கேப்டனான ரகானே அணியை வழிநடத்த வேண்டும். ஆனால் 2 டெஸ்டிலும் ரகானே மோசமாக விளையாடி இருக்கிறார். எனவே, அனுபவ மூத்த வீரர் என்ற அடிப்படையில் அஷ்வினுக்கு கேப்டன் பதவி தேடி வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை