இந்தியாவின் கனவு தகர்ந்தது * ‘டாப்–ஆர்டர்’ சரிவால் ஏமாற்றம் | ஜூலை 10, 2019

தினமலர்  தினமலர்

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்–1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

இலக்கு ‘240’

நியூசிலாந்து அணி46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழைகுறுக்கிட்டது. தொடர்ந்து நான்கரை மணி நேரம் நீடிக்க, ஆட்டம் நிறுத்தப்பட்டது. ‘ரிசர்வ் டே’ விதிப்படி நேற்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

சரிந்த ‘டாப்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட, நியூசிலாந்து ‘வேகங்கள்’ மிரட்டினர். ரோகித் சர்மா 1, கேப்டன் கோஹ்லி 1, ராகுல் 1 என வரிசையாக அவுட்டாக, இந்திய அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட் என தள்ளாடியது.

கார்த்திக் ஏமாற்றம்

ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் இணைந்தனர். 20 பந்தில் ஒரு ரன் கூட எடுக்காத கார்த்திக், 21வது பந்தில் பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. கார்த்திக் 6 ரன்னுக்கு கிளம்பினார்.

அடுத்து ரிஷாப் பன்ட், பாண்ட்யா இணைந்தனர். இந்திய அணி 16.5வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. சிக்சருக்கு ஆசைப்பட்ட ரிஷாப் பன்ட் (32) வீணாக அவுட்டானார். சற்று நேரத்தில் பாண்ட்யாவும் (32) இதோபோல அவுட்டாக, இந்திய அணி மீள முடியாத நிலைக்கு சென்றது.

போராடிய ஜடேஜா

தோனி, ஜடேஜா கடைசி போராடினர். இந்திய அணிக்காக முதல் சிக்சர் அடித்தார் ஜடோஜா. தொடர்ந்து சான்ட்னர் பந்துகளில் 2 சிக்சர் விளாசினார். நீஷம் பந்தில் பவுண்டரி அடித்த இவர் ஒருநாள் அரங்கில் 11வது அரைசதம் எட்டினார். 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்க்க, இந்தியாவுக்கு சற்று நம்பிக்கை கிடைத்தது.

இந்நிலையில் ஜடேஜா (77) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் தோனி (50) ரன் அவுட்டாக, தோல்வி உறுதியானது. புவனேஷ்வர் (0), சகால் (4) அவுட்டாக, இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 18 ரன்னில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, பைனலுக்குள் நுழைந்தது.

 

கடந்த 1992 முதல் ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து தோற்கிறது. 1992, 1999, 2003 (வெற்றி), 2019 உலக கோப்பை, 2000 சாம்பியன்ஸ் டிராபி, 2007, 2016 ‘டுவென்டி–20’ உலக கோப்பை என, கடைசி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டும் இந்தியா வென்றது.

 

2

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இரண்டாவது முறையாக முன்னேறியது முன்னேறியது நியூசிலாந்து. இதற்கு முன் 2015 பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

 

24

உலக கோப்பை தொடரின் ‘பவர் பிளே’ ஓவர்களில் குறைந்த ரன் எடுத்த அணியானது இந்தியா (24/4 ரன்). இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தியா (28/1 ரன்) இதேபோல சொதப்பியது.

 

‘நாக் அவுட்’ அலர்ஜி

‘நாக் அவுட்’ போட்டிகள் என்றாலே, கோஹ்லிக்கு அலர்ஜி போல. 2011 உலக கோப்பை காலிறுதியில் 24 ரன் எடுத்த இவர், அரையிறுதியில் 9, பைனலில் 35 ரன்கள் மட்டும் எடுத்தார்.

* அடுத்து 2015 உலக கோப்பை காலிறுதியில் 3 ரன்னுக்கு வீழ்ந்த கோஹ்லி, 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் 1 ரன் எடுத்தார். தற்போது 2019 உலக கோப்பை தொடர் அரையிறுதியில் மறுபடியும் அதிர்ச்சி (1 ரன்) தந்தார்.

 

5 ரன், 3 விக்.,

உலக கோப்பை அரையிறுதியில் குறைந்த ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த அணியானது இந்தியா. இதற்கு முன் 1996ல் ஆஸ்திரேலிய அணி 8 ரன், 3 விக்கெட் பறிகொடுத்தது.

* ஒருநாள் அரங்கில் குறைந்த ரன்னுக்கு ‘டாப்–3’ விக்கெட்டுகளை இந்தியா இழந்தது இது தான் முதன் முறை. இதற்கு முன் 2005, ஐதராபாத் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

 

மீண்டும் இப்படியா

கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலில் ரோகித், கோஹ்லி தலா 1 ரன்னுக்கு அவுட்டாகினர். தற்போது உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் மீண்டும் இருவரும் 1 ரன்னுக்கு திரும்பி ஏமாற்றம் தந்தனர்.

 

ஒரே மாதிரியாக...

ஒருநாள் அரங்கில் ரிஷாப் பன்ட் கடைசியாக அவுட்டான 3 போட்டிகளிலும் ஒரே மாதிரியாக ‘சுவீப் ஷாட்’ அடித்து தான் அவுட்டானார். 8 போட்டிகளில் இவர் 5 முறை ஒரே மாதிரி அவுட்டானார்.

 

மோடி ஏமாற்றம்

பிரதமர் மோடி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டது. இதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அரையிறுதி முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் இந்திய அணி கடைசி வரை போராட்ட உணர்வை வெளிப்படுத்தியது போராடியது. வெற்றி தோல்வி வாழ்க்கையில் சகஜம். வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை