அதிர்ச்சி அளித்த ஆச்சார்யா! பதவியை துறந்தார் ஆர்.பி.ஐ., துணை கவர்னர்

தினமலர்  தினமலர்
அதிர்ச்சி அளித்த ஆச்சார்யா! பதவியை துறந்தார் ஆர்.பி.ஐ., துணை கவர்னர்

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான, விரால் ஆச்சார்யா, பதவிக்காலம் முடிவடைவதற்கு, இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து, அதிர்ச்சி அளித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களில், ரிசர்வ் வங்கியிலிருந்து, ராஜினாமா செய்துள்ள உயரதிகாரிகளில், இவர் இரண்டாவது நபர். இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பரில், அப்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த, உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்கள் மீதம் இருந்த நிலையில், படேல், ராஜினாமா செய்தார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, படேல் ராஜினாமா செய்துவிட்டதாக பரவலாக பேச்சு இருந்தது. தற்போது, இரண்டாவது நபராக ஆச்சார்யாவும் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், இதற்கும் காரணம் கருத்து வேறுபாடே என்கின்றனர்.

ராஜினாமா கடிதம்:
விரால் ஆச்சார்யா, ராஜினாமா செய்திருப்பது குறித்து, ரிசர்வ் வங்கி, சிறிய அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:சில வாரங்களுக்கு முன், தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார், ஆச்சார்யா. கடிதத்தில், தவிர்க்க முடியாத சொந்த காரணங்களுக்காக, பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஜூன், 23ம் தேதிக்கு பின், பதவியை தொடர முடியாது எனவும், அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, அமைச்சரவையின் நியமனங்கள் குழு, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக, விரால் ஆச்சார்யாவை நியமித்தது. இதையடுத்து, ஆச்சார்யாவின் தற்போதைய ராஜினாமா கடிதத்தையும், இக்குழுவே பரிசீலித்து ஏற்க வேண்டும் என்கின்றனர். ஆச்சார்யா, ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, என்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.கனுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகிய மூவர் மட்டுமே தற்போது துணை கவர்னர்களாக எஞ்சி உள்ளனர்.

விமர்சனம்:
கடந்த, 2017ம் ஆண்டு, ஜனவரியில், ரிசர்வ் வங்கி துணை கவர்னராக, ஆச்சார்யா பொறுப்பேற்றார். பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இளம் வயதுக்காரர் என்ற பெருமை, ஆச்சார்யாவுக்கு உண்டு.நியூயார்க் பல்கலை, ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பைனான்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தவரை, 2016 டிசம்பரில், துணை கவர்னராக, மூன்று ஆண்டுகளுக்கு அரசு நியமித்தது. இதையடுத்து, ஜனவரி 2017ல் துணை கவர்னராக பொறுப்பேற்றார்.

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பது குறித்த விதிமுறைகளில், தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இம்மாற்றங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆச்சார்யா, சிறப்பாக செயல்பட்டார். சுதந்திரமான சிந்தனை போக்கு உடைய பொருளாதார அறிஞரான, ஆச்சார்யா, பல்வேறு சந்தர்ப்பங்களில், ரிசர்வ் வங்கியின் சுயாட்சி சம்பந்தமாக, மத்திய அரசுக்கும், நிதியமைச்சகத்துக்கும் எதிரான விமர்சனங்களை வைத்து வந்தார்.

உர்ஜித் படேல்:
கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு விரிவுரையின் போது, அரசியல் தலையீடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.இதையடுத்து, அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான உரசல் போக்கு பொதுவெளிக்கு வந்தது. ‘பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், பொதுவான இடங்களில், அரசின் மீது விமர்சனங்களை வைப்பது தவறாகும்’ என, அவர் மீதும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில், தன்னை, ‘ஏழைகளின் ரகுராம் ராஜன்’ என குறிப்பிட்ட, ஆச்சார்யா, ‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை குறைப்பது, நிதிச் சந்தை மீதான நம்பிக்கையை குலைத்து விடும்’ என, எச்சரித்தார்.

இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த முடிவை, ஆறு பேர் அடங்கிய குழுவே முடிவு செய்யும் என, அறிவிக்கப்பட்டது. அதுவரை, ரிசர்வ் வங்கி கவர்னர் ஒருவரே இறுதி முடிவு எடுத்து வந்த நிலையில், இந்த மாற்றத்தை பல நிபுணர்கள் வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாக, கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அந்த நாளிலிருந்தே, விரால் ஆச்சார்யாவும் வெளியேறிவிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, சற்று தாமதமாக அந்த முடிவை அறிவித்துள்ளார் என்கின்றனர், நிதிச் சந்தையினர். ரிசர்வ் வங்கி பணியிலிருந்து வெளியேறும் ஆச்சார்யா, அடுத்து பல்கலை பேராசிரியர் பணிக்கு செல்லக்கூடும் என, கருதப்படுகிறது.

உரசல் போக்கு:
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குறித்து கவர்னர் சக்திகாந்த தாசுக்கும், துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. அதன் எதிரொலியாகவே, விரால் ஆச்சார்யா, தற்போது, தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சொல்கின்றனர்.வட்டிவிகிதம் குறித்த விஷயங்களில், விரால் ஆச்சார்யாவின் முடிவுகள் வேறுவிதமாகவே இருந்து வந்தன. நிதிக் கொள்கை குறித்தான, 15 கூட்டங்களில், இரண்டு முறை மட்டுமே வட்டி விகித குறைப்புக்கு, ஆச்சார்யா ஆதரவளித்துள்ளார்.

பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கூட, வட்டி விகித குறைப்புக்கு எதிரான நிலைப்பாட்டையே ஆச்சார்யா எடுத்தார். மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருக்கும், 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் இருப்பை, மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு உதவுவதற்காக வழங்குவது குறித்தும், ஆச்சார்யா எதிரான நிலைப்பாடே வைத்திருந்தார்.

மூலக்கதை