மே மாத நுகர்வோர் நம்பிக்கை சரிவு

தினமலர்  தினமலர்
மே மாத நுகர்வோர் நம்பிக்கை சரிவு

மும்பை:கடந்த மே மாதத்தில், இந்திய நுகர்வோர் நம்பிக்கை சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின், ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


வேலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவை, இந்தச் சரிவுக்கு காரணமாக அமைந்திருப்பதை, ஆய்வு, காட்டுவதாகத் தெரிவித்துள்ளது, ரிசர்வ் வங்கி.இது குறித்து, இந்தஆய்வறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


கடந்த மே மாதத்தில், இந்திய நுகர்வோர்களின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, பொருட்களின் விலை நிலவரம், பொருளாதாரம் ஆகியவை இந்தச் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளன.கடந்த மார்ச் மாதத்தில், நுகர்வோர் நம்பிக்கை, 104.6 புள்ளிகளாக, சிறப்பான உயர்வைக்கண்டிருந்தது. ஆனால், கடந்த மே மாதத்தில், இதுவே, 97.3 புள்ளிகளாகச் சரிந்துவிட்டது.வேலை, பொருட்களின் விலை நிலவரம் உள்ளிட்டவற்றில், மக்கள் அவநம்பிக்கை அடைந்திருப்பதை, இந்த சி.சி.எஸ்., எனும் நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு காட்டுவதாக இருக்கிறது.


ரிசர்வ் வங்கியின் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் பொருளாதார நிலை, வருமானம், செலவு நடத்தை ஆகியவை குறித்து, இதற்கு முன்பு இருந்த நேர்மறையான எண்ணத்தில், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு, 13 பெரிய நகரங்களில், 5 ஆயிரத்து, 200 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்டது.


தற்போது உள்ள நிலவரத்தின் அடிப்படையில், அடுத்த முழு ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் குறித்த ஆய்வில், நுகர்வோர் நம்பிக்கை, 128.4 புள்ளிகளாகச் சரிவு ஏற்பட்டுள்ளது. இது, கடந்த மார்ச் மாதத்தில், 133.4 புள்ளிகளாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.இருப்பினும், வரும் ஆண்டுகளில், பொதுவான பொருளாதாரத்தில், முன்னேற்றம் ஏற்படும் என, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி யின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை