வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல்

தினமலர்  தினமலர்
வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல்

புதுடில்லி: பொதுத் துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்துள்ளன. திவால் சட்ட நடவடிக்கைகளால், வாராக்கடன் வசூல், இரு மடங்கு உயர்ந்துள்ளது.


இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், 1.80 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தன. ஆனால், திவால் சட்டத்தின் கீழ், எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் பூஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனங்களின் விற்பனை தொடர்பான பணிகள் முடியாமல் உள்ளதால், வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முடியவில்லை.


எனினும், நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனங்கள் விற்பனை மூலம், வங்கிகளுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நிதியாண்டின், முதல் அரையாண்டில், பொதுத் துறை வங்கிகள், 60 ஆயிரத்து, 713 கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்துள்ளன. இது, முழு நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


முந்தைய, 2017 – -18ம் நிதியாண்டில், 74 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடும் போது, கடந்த நிதியாண்டில், வாராக்கடன் வசூல், இரு மடங்கை நெருங்கியுள்ளது.வங்கிகள், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலம், 55 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்து உள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனம்ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் நிதி நெருக்கடி அம்பலத்திற்கு வந்த பின், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம், பணப் புழக்கம் குறைந்துள்ளது. அதனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாராக் கடன் மற்றும் பணப்புழக்க பற்றாக்குறை பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முயற்சி மேற்கொண்டுள்ளன.


பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் அமைய உள்ள மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த சிறிய வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைக்க முன்னுரிமை அளிக்கும். அது போல, பொதுத் துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில், அதிக அளவில் வாராக்கடனை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


கைமாறும் நிறுவனங்கள்: திவால் சட்டத்தின் கீழ், ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. பூஷண் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த, ஜே.எஸ்.டபிள்யு., டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனம் ஏலத் தொகையாக, 19 ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளது.டாடா ஸ்டீல், ஏலத் தொகையை, 17 ஆயிரம் கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொண்டது.இரு பெரிய நிறுவனங்களின் கைமாறும் பணி, அடுத்த சில மாதங்களில் முடிவிற்கு வரும் என, தெரிகிறது.

மூலக்கதை