கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம்

தினமலர்  தினமலர்
கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம்

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசை விட, மாநிலங்களின் கடன் வளர்ச்சி அதிகமாக உள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.


இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஐந்தாண்டுகளில், நிதிச் சந்தையில், கடன் பெறுவதில், மத்திய அரசை விட, மாநில அரசுகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.


நிதிச் சந்தை:
மத்திய அரசு பெற்ற கடன், ஆண்டுக்கு சராசரியாக, 0.26 சதவீத வளர்ச்சியுடன், ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது. இதே காலத்தில், மாநில அரசுகள், நிதிச் சந்தையில் பெற்ற கடன், ஆண்டுக்கு சராசரியாக, 19.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன.மாநில அரசுகள் அதிக அளவில், நிதிச் சந்தையில் கடன் பெற்றதன் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.அது போல, 2014 ஏப்ரல் – 2019 மார்ச் வரையிலான, ஐந்தாண்டுகளில், மத்திய – மாநில அரசுகளின் மொத்த கடனில், மாநில அரசுகளின் பங்கு, 25.9 சதவீதத்தில் இருந்து, 45.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.


சிறுசேமிப்பு:
கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், மத்திய – மாநில அரசுகள், மொத்தம், 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. இதில், பெரு நிறுவனங்களின் கடன் பத்திர சந்தையில் இருந்து, 6.5 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இதே காலத்தில், வங்கி துறையின் கடன் வளர்ச்சியும், இதே அளவிற்கு காணப்பட்டது.


செலவு அதிகம்:
மதிப்பீட்டு காலாண்டில், வங்கி துறையின் கடன் வளர்ச்சி, 11.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மத்திய அரசு, அதன் கடன் தேவைகளுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இதில், கடனுக்கான செலவு அதிகம் என்பதால், மாநிலங்கள், நிதிச் சந்தை கடன்களை நாடுகின்றன.இதனால், நிதிச் சந்தை சார்ந்த கடன் வளர்ச்சியில், மத்திய அரசை விட, மாநிலங்களின் பங்கு அதிகமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை