ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்மும்பை இண்டியன்ஸ் மோதல்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி புதுடெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.


நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளுமே இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ளன.

அவற்றில் இரு அணிகளுமே தலா 5 வெற்றிகளை பெற்று, 10 புள்ளிகள் எடுத்துள்ளன.

மும்பையில் நடந்த போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பன்ட், 27 பந்துகளில் 78 ரன்களை குவித்து மிரட்டினார். அவரே அப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம்பெறவில்லை. எனினும் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களில் யாரேனும் ஒருவர் காயம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலை காரணமாகவோ விளையாட முடியாமல் போனால் ரிஷப் பன்ட், அம்பாதி ராயுடு ஆகியோரில் ஒருவர் இங்கிலாந்து செல்வார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

எனவே ரிஷப் பன்ட் இன்றைய போட்டியில் பொறுப்பாக ஆடுவார் என்று டெல்லி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் மற்றும் ஆல் ரவுண்டர் கோலின் முன்ரோ என டெல்லி அணியின் டாப் ஆர்டர் வலுவாக காட்சியளிக்கிறது.

இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, ரபாடா, லமிச்சேன் என பவுலர்களும் மிரட்டுகின்றனர்.

மும்பை அணியிலும் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், குவின்டன் டி காக், இஷான் கிஷன் என பேட்ஸ்மென்கள் வரிசை கட்டுகின்றனர். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, கிரன் போலார்ட் ஆகியோர் மிரட்டுகின்றனர்.

பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர், மிட்செல் மெக்லீகன் என உலகத்தரத்தில் கலக்கி வருகின்றனர். டெல்லியில் அந்த அணியை எதிர்த்து ஆடுவது மிகவும் கடினம்.

முதலில் பேட் செய்து வலுவான இலக்கை நிர்ணயித்தால், பந்து வீச்சில் அவர்களை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனா கூறியுள்ளார்.

.

மூலக்கதை