இந்தியாவில், ‘ஆப்பிள் ஐபோன்’ தயாரிப்பு:‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
இந்தியாவில், ‘ஆப்பிள் ஐபோன்’ தயாரிப்பு:‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு

புதுடில்லி:தைவானைச் சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், இந்தியாவில் இந்தாண்டு ‘ஆப்பிள் ஐபோன்’ சாதனங்கள் தயாரிப்பை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு, ‘நோக்கியா’ நிறுவனத்திற்காக, மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. வரிப் பிரச்னை காரணமாக, நோக்கியா நிறுவனம் மொபைல்போன் தயாரிப்பை நிறுத்தியதை அடுத்து, 2015ல் பாக்ஸ்கான் மூடப்பட்டது.


இந்நிலையில், 2018ல், நோக்கியா பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதை அடுத்து, பாக்ஸ்கான், ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலையில், இந்தாண்டு ஆப்பிள் ஐபோன் தயாரிப்பை துவக்க உள்ளது.இது தொடர்பாக, பிரதமர் மோடியை, பாக்ஸ்கான் நிறுவன தலைவர், டெரி கோ விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தைவானைச் சேர்ந்த, ‘விஸ்ட்ரான்’ நிறுவனம், பெங்களூரில், ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களை தயாரித்து வருகிறது.


இந்நிறுவனம், புதிய ஆப்பிள் போன் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், பாக்ஸ் கான் நிறுவனம், ஆப்பிள் ஐபோன்களின் புதிய மாடல்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாக்ஸ்கான், ஏற்கனவே, ஆப்பிள் ஐபோன்களை ‘அசெம்பிளிங்’ செய்து தரும் பணியில் ஈடுபட்டு உள்ளது.


சீனாவை விஞ்சியது


இந்தியா, ஸ்மார்ட்போன் சந்தையில், சீனாவை விஞ்சி வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த, 2018ல், இந்தியா, 14.23 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 14 சதவீதம் அதிகம்.அமேசான், ‘பிளிப்கார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்களின், அதிரடி தள்ளுபடிகளால், வலைதளம் சார்ந்த பொருட்கள் விற்பனையில், ஸ்மார்ட் போன் பங்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, 38.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி, இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், 42.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஐ.டி.சி., ஆய்வறிக்கை

மூலக்கதை