மத்திய அரசுக்கு பெரிய தலைவலி

தினமலர்  தினமலர்
மத்திய அரசுக்கு பெரிய தலைவலி

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியாவில் தொழில் துறை உற்பத்தி, 0.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பதாக, இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் என்ன? எப்படி இதை சரிசெய்வது? இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கு, ஐ.ஐ.பி., என்னும் இந்திய தொழில் துறை உற்பத்திக் குறியீடு பயன்படுகிறது. ஒவ்வொரு மாதமும், 23 தொழில் துறை குழுக்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் கணக்கிடப்பட்டு, மொத்த குறியீட்டு எண் அறிவிக்கப்படு


இதன்படி, பிப்ரவரி, 2019க்கான அறிக்கையில், இந்தியத் தொழில் துறை, 0.1 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில், 6.9 சதவீதம் வளர்ந்தது. 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.ஏப்ரல், 2018 முதல் பிப்ரவரி, 2019 வரையான காலக்கட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, 4 சதவீதம் மட்டுமே. சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில், 4.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த, ஐ.ஐ.பி.,யும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


சுரங்கத் துறை, உற்பத்தி துறை மற்றும் மின்சாரம் ஆகியவை அவை. அதில், மொத்தக் குறியீட்டில், 77 சதவீத பங்களிப்பு செய்யும் உற்பத்தித் துறையிலோ, பிப்ரவரி மாதத்தில், 0.3 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஓராண்டுக்கு முன், இதே உற்பத்தித் துறையில், 8.4 சதவீத வளர்ச்சி இருந்தது.மேற்சொன்ன மூன்று பிரிவுகளில், 32 தொழில் துறை குழுக்கள் உள்ளன.


அவற்றில், பிப்ரவரி மாதத்தில் மட்டும், 10 குழுக்கள் தான் வளர்ச்சியைக் கண்டுள்ளன. பிற குழுக்கள் அனைத்திலும், வளர்ச்சி எதிர்மறையாகவே உள்ளன. அதாவது சரிவு.இதிலும், ‘அடிப்படை உலோகங்கள்’ தயாரிக்கும் குழுவே அதிகபட்சமாக, 12.8 சதவீத பங்களிப்பு செய்வது. அதில், 1.8 சதவீத வீழ்ச்சி. மிஷினரி மற்றும் கருவிகள் தயாரிக்கும் குழுவில் தான் அதிகபட்சமாக, 12.8 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


தொழில் துறை வளர்ச்சி என்பது ஆரம்பநிலைப் பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், நுகர்பொருட்கள், நுகர்பொருள் அல்லாத பொருட்கள் என்ற வகையில் பகுக்கப்படுகிறது. இதில், மூலதனப் பொருட்களின் உற்பத்தியில், 8.8 சதவீத சரிவும், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தியில், 4.9 சதவீத சரிவும் ஏற்பட்டுள்ளன.


சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் இவை முறையே, 16.6 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தன.எதற்கு இவ்வளவு தகவல்களை போட்டு, தலைவலி ஏற்படுத்துகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரே ஒரு விஷயம் தான். தொழில் துறையில் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு போய் விடலாம். அது ஒரு சராசரி கணக்கு. அதுவே வீழ்ச்சி அடைந்திருக்கும் போது, அந்த எண்ணுக்கு பங்களிப்பு செய்யும் துறைகள், பகுதிகள் என்னென்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


பாதிக்கப்பட்டவை அத்தனையுமே உற்பத்தி சார்ந்த பெருந்தொழில்கள். இதை இன்னும் இரண்டு புள்ளி விபரங்களோடு இணைத்துப் படியுங்கள். ஒன்று, வீழ்ச்சி அடைந்து வரும் கார், இரு சக்கர வாகன விற்பனை. அதாவது, பல கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்து விட்டன. சந்தையில் ஏற்கனவே தயாரித்த கார்கள் விற்பனையாகாமல் தேங்கிப் போய் இருக்கின்றன.


இன்னொரு புறம், பழைய கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கும் மதிப்பீடும் இங்கே கவனிக்கத்தக்கது.மேலும், சி.எம்.ஐ.இ., என்ற மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கணக்கு முக்கியமானது. இந்தியாவில் வேலையின்மை, 7.2 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது என்கிறது.அதிலும் நகரவாழ் திறன்மிக்க இளைஞர்களிடம் வேலையின்மை, 2017 – -18ல், 12.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது


இந்த ஆய்வு.இதையெல்லாம் இணைத்துப் புரிந்து கொண்டால், இப்படியொரு சித்திரம் எழுவது நிச்சயம். ஒருபக்கம், விற்பனை இல்லை. அதற்குக் காரணம், மக்களிடம் பணப்புழக்கம் இல்லை; வங்கிக் கடன்கள் இல்லை. அதனால், புதிய பொருட்களை வாங்குவதை, மக்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே போகின்றனர். அதுவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இது நடைபெறுகிறது.


இதன் தொடர்ச்சியாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், புதிய பொருட்களை உற்பத்தி செய்வதை குறைத்துக் கொண்டுள்ளன அல்லது நிறுத்திவிட்டன. இதன் விளைவு தான், வேலையின்மை. ஒரு பெரிய விஷச்சுழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை துல்லியமாகக் காட்டுகின்றன, மேலேஉள்ள புள்ளி விபரங்கள்.


இந்தச் சரிவு இப்போது துவங்கவில்லை, ஜூன், 2018ல் இருந்தே படிப்படியாக தொய்வும், அதைத் தொடர்ந்து சரிவும் ஏற்பட்டுவிட்டன.இப்போது தான், முழுச் சித்திரம் வெளியே தெரியத் துவங்கியுள்ளது.இதோடு, மார்ச் மாதத்துக்காக சில்லரை விலை பணவீக்கம், 2.86 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


நாம் தொழில் துறை வளர்ச்சியில் இருந்து, சரிவுக்குள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். இதைத் தடுத்தே ஆக வேண்டும். லோக்சபா தேர்தலுக்குப் பின், யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்னையே தலையாயது.இதை சரி செய்ய, 360 டிகிரி அணுகுமுறை தேவை. ஒரு பக்கம், வங்கிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும். அதற்கு வழி செய்வது போன்று ரெப்போ விகிதங்கள், மேலும், 2 – 0.25 சதவீதங்களாவது குறைக்கப்பட வேண்டு


வங்கிக்குள் பெருகும் தொகை, தொழில் துறையினருக்கு கடனாக கொடுக்கப்பட வேண்டும். அதேபோல், பயனாளிகள் பொருட்களை வாங்குவதற்கு, எளிய கடன் வசதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ரெப்போ விகிதம் குறைந்தாலே, வட்டி விகிதமும் குறையும்.ஒரு பக்கம், மக்களை அதிகம் நுகர வைக்க வேண்டும். இன்னொரு பக்கம், அதற்கேற்ப உற்பத்தி பெருக வேண்டும்.


இரண்டு தரப்புக்கும் தேவையான நிதி ஆதாரங்களை அரசு ஏற்படுத்தினால் தான், நடுவில் வேலையின்மை என்ற பிரச்னை தீரும். இவையெல்லாம் விரைந்து செய்யப்பட வேண்டும்.புதிய அரசுக்கு, பெரிய தலைவலி காத்திருக்கிறது.


ஆர்.வெங்கடேஷ்


பத்திரிகையாளர்

மூலக்கதை