160 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருப்போம்: தொடர் தோல்விகளால் கோஹ்லி விரக்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
160 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருப்போம்: தொடர் தோல்விகளால் கோஹ்லி விரக்தி

பெங்களூரு:  டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 160 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருப்போம் என தொடர்ச்சியாக 6 போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோஹ்லி 41 ரன்கள்(33 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தார்.

பார்த்திவ் படேல் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய டெல்லி பவுலர் ரபாடா, இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வானார்.



150 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணி, 18. 5 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்புடன் ஆடி டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்தார்.

விரக்தியின் விளிம்பில் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘160 ரன்கள் எடுத்திருந்தால் கூட இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். தொடர்ச்சியான இடைவெளிகளில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் தவறு ெசய்து வருகிறோம். இதனை ஏற்க முடியாது.

பிட்ச் மிகவும் மந்தமாக இருந்தது. பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இல்லை.

நான் மேலும் இரண்டு ஓவர்கள் ஆடியிருந்தால், கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் வரை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார். ரபாடா கூறுகையில், ‘‘அணியாக ஒருங்கிணைந்து ஆடுவதில், இந்த தொடர் சற்று வித்தியாசமானது.

அவ்வாறு ஒருங்கிணைந்து சாதிப்பதில் மகிழ்ச்சிதான்.

போட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக பந்து வீச வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து ஆடுகிறேன்’’ என்றார்.

டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், ‘‘இந்த பிட்ச்சில் பேட் செய்வது கடினமாக இருந்தது. எதிரணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த நான் அனுமதிக்கவில்லை.

பீல்டர்களுக்கு நடுவே பந்தை அடித்து ரன்களை சேர்க்கும் நோக்கில் ஆடினேன். பெங்களூரு அணி 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது.

எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். கடைசி 2 ஓவர்களில், ரபாடா சிறப்பாக பந்து வீசினார்’’ என்று தெரிவித்தார்.



கொல்கத்தா வெற்றி
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 73 ரன்கள்(59 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியின் அறிமுக வீரர் ஹாரி கர்னி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இவரே இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வானார். கொல்கத்தா அணி 13. 5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஓபனர் சுனில் நரேன் 25 பந்துகளில் 47 ரன்களை (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார்.


.

மூலக்கதை