பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்

தினமலர்  தினமலர்
பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்

'அக்னி தேவி' படம் பற்றிய செய்தி தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக். இந்தப்படத்தின், கதையை எனக்கு கூறிய படி எடுக்கவில்லை, ஐந்து நாட்கள் மட்டுமே நான் நடித்தேன், எனக்குப் பதிலாக வேறு ஒருவரை 'டூப்' போட்டு எடுத்து படத்தை வெளியிட்டுள்ளார்கள் என படத்தின் இயக்குனர் ஜான் பால்ராஜ் மீது புகார் தெரிவித்தும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் அந்தப் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா.

மேலும் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், அதை மீறி படத்தை எப்படி வெளியிட்டார்கள் என பேட்டி அளித்தார். அதோடு, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றையும் விமர்சித்தார்.

இந்நிலையில், இந்தப்படத்திற்கு நீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை. பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விண்ணப்பத்தை வைத்து, அதுதான் தடை உத்தரவு என பொய்யாக பேட்டி கொடுத்திருக்கிறார் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், அக்னி தேவி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சீன்டோ நிறுவனத்தின் ஸ்டாலின், வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு...

அக்னி தேவி படம் தொடர்பாக பாபி சிம்ஹா, ஏற்கனவே கோவை மாவட்ட முனிசீப் கோர்ட்டிலும், முதன்மை சப் கோர்ட்டிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் தொடர்ந்துள்ளதில், கோர்ட் எந்த உத்தரவும் எங்களுக்கு எதிராக பிறப்பிக்கவில்லை. தற்போது அதேப்போன்ற வேறு ஒரு பொய்யான வழக்கினை, அதே எல்லைக்குட்பட்ட கோர்ட்டில், தகவல்களை மறைத்து தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் உத்தரவு பெற்றுள்ளதாகவும் கூறுவது பற்றி எங்களுக்கு எந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை.

காரணம்... பாபி சிம்ஹா சென்னை நந்தம்பாக்கம் போலீசில் எங்கள் பட இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது பெயிலில் வரமுடியாத அளவுக்கு பொய்யான புகார் கொடுத்து வழக்கு போட்டுள்ளார். அவருக்கும், எந்த நோட்டீஸ் இதுவரை கிடைக்கபெறவில்லை. மேலும் இப்படத்தை விநியோகம் செய்ய இரண்டு மாதத்திற்கு முன்பே வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதால் இயக்குநரோ, தயாரிப்பாளரோ நேரடியாக இப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இயக்குநர் ஜான் பால்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைத்ததும் மேற்கண்ட வழக்கு சம்பந்தமான அனைத்து உண்மை தகவல்களையும் தகுந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்திற்கும், ஊடகத்திற்கும் வெளியிட தயாராக உள்ளார்.

எனவே பாபி சிம்ஹாவின் பொய்யான பரப்புரைகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்து கொள்கிறோம். இந்த விஷயத்தில் பாபி சிம்ஹா உள் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிய வருகிறது. அதனை தகுந்த சட்ட நடவடிக்கை மூலம், உண்மையான ஆதாரங்களுடன் எதிர்கொள்ள இயக்குநர் தயாராக உள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை