நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்; ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ மறுமதிப்பீடு

தினமலர்  தினமலர்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்; ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ மறுமதிப்பீடு

புதுடில்லி: ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும், 2020- – 21ம் நிதியாண்டில், 6.8 சதவீதமாக குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ மறுமதிப்பீடு செய்து உள்ளது.

முந்தைய மதிப்பீட்டில், பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை, 7.2லிருந்து, 6.9 சதவீதமாக குறைத்துள்ளது. அதேசமயம், மத்திய புள்ளியியல் துறை, 7 சதவீதம் என, மதிப்பிட்டு உள்ளது.

கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருந்தது.நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளில் முறையே, 7 மற்றும் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில், 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையின் மந்தநிலை, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் சுலபமாக கடன் கிடைக்காத சூழல், அதன் தாக்கத்தால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள தொய்வு போன்றவற்றை கூறலாம்.

இந்தாண்டு, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை, மேலும் குறைக்கும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, டிசம்பரில், 72 ரூபாயாக குறையும் என, பிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை