'இந்தியன் 2' தாமதம், காரணம் என்ன ?

தினமலர்  தினமலர்
இந்தியன் 2 தாமதம், காரணம் என்ன ?

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம், கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமானது. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பின்னர் பிரேக் விட்டார்கள். உடனே படம் நின்றுவிட்டது என்று தகவல் வேகமாகப் பரவியது.

படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததுதான் காரணம் என்றார்கள். அடுத்து கமல்ஹாசனுக்கு போட்ட வயதான மேக்கப்பில் திருப்தியில்லை என்றும் சொன்னார்கள். கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் மூழ்கிவிட்டதால் தேர்தல் முடியும் வரை படப்பிடிப்பு நடக்காது என்றும் தெரிவித்தார்கள். இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டன.

ஆனால், கமல்ஹாசனுக்கு போடப்பட்ட வயதான மேக்கப்பில் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதாகவும், அதனால் அதைச் சரி செய்தபின்தான் படப்பிடிப்பு நடக்கும் என்றும், தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எப்படி இருந்தாலும், தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கும் வரை படப்பிடிப்பு நடக்க வாய்ப்பில்லை என்றுதான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' இப்படித்தான் சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அந்தப் படம் மீண்டும் நடக்குமா நடக்காதா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனாலும், ஸ்ருதிஹாசன் அந்தப் படத்தைப் பற்றி பல பேட்டிகளில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். 'சபாஷ் நாயுடு' படத்தையும் லைகா இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை