சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ.,

தினமலர்  தினமலர்
சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ.,

மும்பை: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்கலாம் என, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கவும், அவற்றின் தர நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உயர்மட்டக் குழுவை, ரிசர்வ் வங்கி அமைத்து உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணைய தலைவர், யு.கே.சின்கா தலைமையிலான இக்குழு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் மேம்பாட்டிற்கு, அனைத்து தரப்பினரின் கருத்தை கோரியுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: முதலீடு அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவது தொடர்பான கருத்துகளை தெரிவிக்குமாறு, அத்துறை சார்ந்தோர் கோரப்படுகின்றனர்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கான தீர்வுகளையும் தெரிவிக்கலாம்.

அத்துடன், இத்துறையின் கடன் மதிப்பீட்டிற்கான தர நிர்ணய செயல்முறைகள் குறித்த யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட தொழில் மையங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற்றனவா என்பது குறித்தும், தொழில் கூட்டமைப்புகள், உயர்மட்டக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

ரிசர்வ் வங்கி வலைதளத்தில், வரும், 28ம் தேதிக்குள், கருத்துகளை பதிவு செய்யலாம். அவற்றின் அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களை, சின்கா குழு உருவாக்கி, ஜூன் மாதத்திற்குள் அறிக்கை வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை