ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: மேரி கோம் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: மேரி கோம் பேட்டி

புதுடெல்லி: ‘டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக கடுமையாக பயிற்சி  எடுத்து வருகிறேன்’ என்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அடுத்த மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் பங்கேற்கவில்லை. 6  முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர், இப்போட்டியில் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: தற்போது 51 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.

இந்த  எடை பிரிவில் சர்வதேச அளவிலான வீராங்கனைகள் யார், யார்? குத்துச்சண்டையில் அவர் மேற்கொள்ள உள்ள அணுகுமுறைகள், தாக்குதல் வியூகங்கள்  குறித்து நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக வரும் செப்டம்பரில் ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டிகளில் நான் கலந்து கொள்ள  வேண்டும்.

அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, அடுத்த ஆண்டு ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில்  பங்கேற்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.

அந்த இலக்கை குறி வைத்து கடினமான  பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அதற்காகத் தான் தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில்  பங்கேற்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

மேரி கோம் வழக்கமாக 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்று ஆடி வருகிறார். ஆனால் இந்த எடை பிரிவு  போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.

இதனால் அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 51 கிலோ எடைபிரிவு குத்துச்சண்டையில் பங்கேற்க பயிற்சி எடுத்து  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை