பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம் சாம்பியன்: பியான்கா அசத்தல்

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம் சாம்பியன்: பியான்கா அசத்தல்

இண்டியன் வெல்ஸ், மார்ச் 19: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருடன் (சுவிஸ்) மோதிய டொமினிக் தீம் (25 வயது, 8வது ரேங்க்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை  இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி பெடரரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க 1-1 என  சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இப்போட்டியில், டொமினிக் தீம் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இண்டியன் வெல்சில் 6வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் பெடரரின் முயற்சி கை கூடவில்லை. இதே தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதிய கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு (18 வயது) 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 18 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். அவர் வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய பியான்கா சாம்பியன் பட்டம் வென்றதன் மூலமாக, மகளிர் டென்னிசில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார்.

மூலக்கதை