2019 ஐ.பி.எல் தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
2019 ஐ.பி.எல் தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்!

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின், அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அந்த வகையில் இத்தொடர் குறித்த புதிய செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
 
இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்,
 
கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
 
ஆனால் தற்போது இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த தொடரில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை.
 
இதற்கு பதிலாக ரஞ்சி கிண்ண தொடரில், சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
மேலும், அவுஸ்ரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
தற்போது அவர் உடற்தகுதி பெற்றுவிட்டதனால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், டெல்லி கேப்பிட்டலஸ் அணியின் ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், மார்ச் 23ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகின்றன.
 
இந்த ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்தமாநிலத்திலும், 2 போட்டிகளை வெளிமாநிலத்திலும் விளையாடுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 3 போட்டிகளை வெளிமாநிலத்தில் விளையாடுகின்றன.
 
இதற்கிடையில், இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
அதன்படி முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி சென்னையில் நடைபெறுகின்றது. இதில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
 
ஏப்ரல் 5ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையின் இறுதிப் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பெங்களூரில் மோதவுள்ளன.
 
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ், டேக்கன் சார்ஜஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இரண்டு முறைகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறைகளும், சம்பியன் கிண்ணங்களை ஏந்தியுள்ளன.

மூலக்கதை