உலக சம்பியனுக்கே இந்த சோதனையா? அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
உலக சம்பியனுக்கே இந்த சோதனையா? அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி!

 

விண்டிஸ் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 137 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
 
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
நேற்று (வெள்ளிக்கிழமை) சென்.கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விண்டிஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
 
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சேம் பிளிங்ஸ் 87 ஓட்டங்களையும், ஜோ ரூட் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பெபியன் அலென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதனைதொடர்ந்து, 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய விண்டிஸ் அணி, 11.5 ஓவர்கள் நிறைவில், வெறும் 45 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதுவே விண்டிஸ் அணி ரி-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட மோசமான, குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
 
அத்தோடு, சர்வதேச அளவில் ரி-20 போட்டிகளில் குறைந்த ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இரண்டாவது அணியாக, விண்டிஸ் அணி தனது பெயரை பதிவுசெய்துக்கொண்டுள்ளது.
 
முதலிடத்தில், இலங்கை அணிக்கெதிராக நெதர்லாந்து அணி 39 ஓட்டங்களுக்கு சுருண்டதே, ரி-20 போட்டிகளில் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மோசமான சாதனையாக உள்ளது.
 
மறுபுறம் 137 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, ரி-20 போட்டிகளில் தனது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியானது சர்வதேச அளவில் நான்காவது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
 
இதற்கு முன்னதாக இலங்கை அணி, கென்யா அணிக்கெதிரான 172 ஓட்டங்களால் பெற்றுக்கொண்ட வெற்றியே, மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சிம்ரொன் ஹெட்மியர் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோர் தலா 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்தான் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, அடில் ராஷிட் மற்றும் லியம் பிளெங்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அசத்திய இங்கிலாந்தின் சேம் பிளிங்ஸ், தெரிவுசெய்யப்பட்டார்.

 

மூலக்கதை