தென்னாப்பிரிக்கா 2-0 என முன்னிலை 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்னாப்பிரிக்கா 20 என முன்னிலை 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி

செஞ்சுரியன்: செஞ்சுரியனில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ஓபனர் டி காக் அதிரடியாக ஆடி 70 பந்துகளில் 94 ரன்களை குவித்தார். இப்போட்டியில் 251 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி, 2-0 என முன்னிலையை எட்டியுள்ளது.   லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே கடந்த 3ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

2வது ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியின் ஓபனர்களாக குவின்டான் டி காக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்கு 14 ஓவர்களில் 91 ரன்களை குவித்தனர்.

15வது ஓவரில் மலிங்கா வீசிய பந்தில் ஹென்ட்ரிக்ஸ் (29 ரன்கள்) தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து 2வது விக்கெட்டுக்கு கேப்டன் டூ பிளெசிசும், டி காக்கும் ஜோடி சேர்ந்தனர்.



அதிரடியாக ஆடிய டி காக், 70 பந்துகளில் 94 ரன்களை (17 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) குவித்தார். 21வது ஓவரில் பெரைரா பந்தில், அவர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில்  பொறுப்பாக ஆடிய கேப்டன் டூ பிளெசிஸ் 66 பந்துகளில் 57 ரன்கள் (7 பவுண்டரிகள்) அடித்து, பெரைரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 45. 1 ஓவர்களில் அந்த அணி 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இலங்கை பவுலர்களில் மலிங்காவும், தனஞ்செயாவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெற்றிக்கு தேவை 252 ரன்கள்.

இலங்கை அணியின் ஓபனர்கள் டிக்வெல்லாவும் (6 ரன்கள்), அவிஷ்கா பெர்னாண்டோவும் (10 ரன்கள்) முறையே ரபாடா, நிஜிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து, அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 3வது வீரராக இறங்கிய குஷல் பெரைராவும் 8 ரன்களில் அவுட் ஆனார்.

இதனால் 10. 1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என இலங்கை தடுமாறியது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஒஷாடா பெர்னாண்டோவும் (31 ரன்கள்), குஷல் மெண்டிசும் (24 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடித்தனர்.

இருவரும் ஆட்டமிழந்த பின்னர், அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல், சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதையடுத்து 32. 2 ஓவர்களில் இலங்கை அணி, 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது.

113 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தொடரில் 2-0 என்ற முன்னிலையை எட்டியுள்ளது. தென்னாப்பிரிக்க பவுலர்களில் ரபாடா, 9 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நிஜிடி, ஆன்ரிச், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.   இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்க ஓபனர் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி டர்பனில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

.

மூலக்கதை