சாம்பியன்ஸ் லீக் புட்பால் இன்ஸ்டாகிராமில் நடுவர்களை சாடிய நெய்மர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் லீக் புட்பால் இன்ஸ்டாகிராமில் நடுவர்களை சாடிய நெய்மர்

பாரிஸ்: பிஎஸ்ஜி கிளப் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு பெனால்டி வழங்கிய நடுவர்களை, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு கடுமையாக சாடியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் பிரான்சில் நடந்து வருகின்றன.

பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கிளப்பும் (பிஎஸ்ஜி), மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பும் நேற்று முன்தினம், பாரீசில் உள்ள பார்க் டெஸ் பிரின்ஸ் மைதானத்தில் மோதின. காயம் காரணமாக இப்போட்டியில் பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆடவில்லை.

மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இக்கட்டான தருணத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

 மான்செஸ்டர் வீரர் ஒருவரை, முறைகேடாக பிஎஸ்ஜியின் முன்கள வீரர்கள் தடுத்து, தள்ளி விட்டதாகக் கூறி, வீடியோவில் பார்த்து நடுவர்கள், இந்த பெனால்டி வாய்ப்பை கொடுத்தனர். இதில் மான்செஸ்டரின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் கோல் அடிக்க, 3-1 என்ற வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

‘‘இது வெட்கக் கேடானது. வீடியோவை பார்த்து பெனால்டி வழங்கிய நடுவர்கள் 4 பேருக்கும் கால்பந்து பற்றி கொஞ்சம் கூட அறிவில்லை என்று தெளிவாக தெரிகிறது.

பெனால்டி வழங்கியது மிகவும் தவறு’’ என்று இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு, நெய்மர் கடுமையாக சாடியுள்ளார். நெய்மரின் இந்த குற்றச்சாட்டு, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தோல்வியால், பிஎஸ்ஜி கிளப் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. மான்செஸ்டர் யுனைட்டட் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

நெய்மரின் இந்த கோபமான பதிவு குறித்து, பிஎஸ்ஜி கிளப்பின் கோச் தாமஸ் டச்செல் கருத்து ஏதும் கூற மறுத்து விட்டார்.



.

மூலக்கதை