கடைசி ஓவருக்காக மனதளவில் தயாராக இருந்தேன்: ஆல்-ரவுண்டராக அசத்திய விஜய் சங்கர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடைசி ஓவருக்காக மனதளவில் தயாராக இருந்தேன்: ஆல்ரவுண்டராக அசத்திய விஜய் சங்கர் பேட்டி

நாக்பூர்: கடைசி ஓவரில் அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய்ஷங்கர். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘43வது ஓவரில் இருந்தே நான் தயாராக இருந்தேன்.

கடைசி ஓவரை நான்தான் வீசப் போகிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். மனதளவில் நான் ரெடியாக இருந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற ஆஸி.

அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓபனர்களில்  ரோஹித் ஷர்மா, முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

ஷிகர் தவான் 21 ரன்களிலும், அம்பாதி ராயுடு 18 ரன்களிலு அடுத்தடுத்து வெளியேற, 17 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் என திணறியது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோஹ்லியும், விஜய் ஷங்கரும் அற்புதமாக ஆடினர்.

விராட் கோஹ்லி பொறுப்பாக ஆடி, அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் சற்று அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் 41 பந்துகளில் 46 ரன்களை (5 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) குவித்தார்.

ஆனால் கோஹ்லி நேராக அடித்த ஒரு பந்து, பவுலர் ஸாம்பாவின் கையில் பட்டு, மறுமுனையில் இருந்த ஸ்டெம்பில் மோதியதில், துரதிருஷ்டவசமாக விஜய் ஷங்கர் ரன்-அவுட் ஆனார்.

இதையடுத்து 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 156 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

அடுத்த வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஓரளவு கை கொடுத்தார். அவர் 40 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இருப்பினும் கேப்டனுக்கே உரிய ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், சதம் அடித்து மிரட்டினார்.

120 பந்துகளில் 116 ரன்கள் எடுத்த கோஹ்லி, 48வது ஓவரின் முதல் பந்தில் கம்மின்சிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். இந்திய அணி 48. 2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஆஸி. பவுலர்களில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

251 ரன்கள் என்ற இலக்கை துரத்தி இறங்கிய ஆஸி. வீரர்களில் ஓபனர்கள் பிஞ்ச்சும், கவாஜாவும் முதலாவது விக்கெட்டுக்கு 14. 3 ஓவர்களில் 83 ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அடுத்தடுத்த ஓவர்களில் 2 பேரும் ஆட்டமிழந்த பின்னர், 3வது வீரராக வந்த ஷான் மார்ஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் ஆஸி.

அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என தடுமாறியது. ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாண்ட்ஸ்கோம்பும், ஸ்டானிசும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அசத்தலான த்ரோ மூலம், ஹாண்ட்ஸ்கோம்பை ரவீந்திர ஜடேஜா ரன்-அவுட் செய்தார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.



கடைசி ஓவரில் ஆஸி. அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், யாரும் எதிர்பாராவண்ணம் விஜய் ஷங்கருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.

பரபரப்பான அந்த தருணத்தில் மிகவும் கூலாக செயல்பட்ட விஜய் ஷங்கர், முதல் பந்தில் ஸ்டானிசை (52 ரன்கள்) எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். 3வது பந்தில் ஸாம்பாவின் ஸ்டெம்புகளை தெறிக்க விட்டார்.

இதையடுத்து 8 ரன்கள் வி்த்தியாசத்தில் இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்றது. இது குறித்து பின்னர் விஜய் ஷங்கர் கூறுகையில், ‘‘நெருக்கடியான நேரத்தில் பந்துவீசவே நான் விரும்பினேன்.

அப்போதுதான் என்னை இவர்கள் நம்புவார்கள். 40வது ஓவரில் இருந்தே நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.

43வது ஓவரில் இருந்தே, கடைசி ஓவரை நான்தான் வீசப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே இருந்தேன். மனதளவில் நான் அதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன்.


கடைசி ஓவரில் ஒரு பந்து கூட வைட், நோபால் என வீசிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக செயல்பட்டேன். ஸ்டெம்புகளை குறிவைத்து அட்டாக் செய்தேன்.

நல்ல பலன் கிடைத்தது. பிட்ச்சில் பால் சற்று ரிவர்ஸ் ஆகிறது என்று பும்ரா, என்னிடம் கூறினார்.

அதை மனதில் கொண்டு பந்து வீசினேன்’’ என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் 500வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி வரும் 8ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

.

மூலக்கதை