தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை சரித்திர சாதனை

தினகரன்  தினகரன்
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை சரித்திர சாதனை

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை, முதல் இன்னிங்சில் 154  ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 68 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 128 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்திருந்தது. ஒஷதா பெர்னாண்டோ 17 ரன், குசால் மெண்டிஸ் 10 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். முதல் 2 நாளில் 32 விக்கெட் வீழ்ந்திருந்ததால், இலங்கை விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஒஷதா - மெண்டிஸ் ஜோடி உறுதியுடன் போராடியது. இவர்களைப் பிரிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் பரிதவித்தனர்.இலங்கை அணி 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து வென்றது. ஒஷதா 75 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), குசால் மெண்டிஸ் 84 ரன்னுடன் (110 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருதும், குசால் பெரேரா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 5  ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளன. தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனை இலங்கை அணி வசமானது.

மூலக்கதை