ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும்!

தினமலர்  தினமலர்
ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும்!

எல்.கே.ஜி., படத்தில், ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்ந்துள்ள, ப்ரியா ஆனந்த், அந்த பட அனுபவம் குறித்து, நமக்கு அளித்த பேட்டி:

இந்த படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை, பாலாஜிக்கு சொல்லிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில், யாரைப் பற்றி பேசுகிறேன் என தெரியாமலேயே வசனம் பேசினேன். இன்னும் நான், படம் பார்க்கவில்லை. சில வசனங்கள் குறித்து, பாலாஜியிடம் கேட்டேன்; அவர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என, கூறிவிட்டார்.


தமிழில் எந்த நடிகர்; இயக்குனருடன் பணியாற்ற ஆசை?
இந்த இயக்குனர், நடிகருடன் தான் பணியாற்ற வேண்டும் என நினைப்பதில்லை. புது இயக்குனர்கள், நல்ல கதையோடு வருகின்றனர். கதை பிடித்திருந்தால், நடிகர் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்; யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன்.


இயக்குனர் ஆகும் எண்ணம் உண்டா?
ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தியா வந்தேன். நடிக்க வந்ததற்கு பின், இயக்குனர் ஆசை போய் விட்டது. தமிழ் திரையுலகில், இப்போதுள்ள நிலைமைக்கு, மற்ற பணிகளை விட, நடிப்பது தான் சுலபமாக இருக்கிறது.


எல்.கே.ஜி., படத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்துள்ளீர்களே...
எல்.கே.ஜி., படத்தின் போஸ்டர் வெளியாகும் போது தான், ஜெயலலிதா கெட்டப்பில், நான் நடித்திருப்பதே எனக்கு தெரியும். அடப்பாவிகளா, மாட்டி விட்டீர்களே என, நினைத்தேன். அந்த போஸ்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


கவுதம் கார்த்திக்குடன் காதல் கிசுகிசு வருகிறதே?
நானும், அவரும் நண்பர்கள்; அவ்வளவு தான். இந்த மாதிரி கேள்வியை இனிமேல் கேட்காதீர்கள். ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அதை விட பெரிய செய்தி, தமிழகத்திற்கு வேறு எதுவும் இல்லை.


காதல் திருமணம் தானா?
எங்கள் வீட்டில் இன்னும் யாரும், என் திருமணம் குறித்து யோசிக்கவில்லை.


தமிழில் நிறைய இடைவெளி ஏன்?
இதற்கு முன், தமிழில் மட்டுமே நடித்தேன். இப்போது, மலையாளம், ஹிந்தியில் நடிக்கிறேன். அதனால், ஒவ்வொரு மொழியிலும் இடைவெளி ஏற்படுகிறது. ஒரு படத்தில் நடித்தாலும், சிறப்பான படத்தில் நடிக்க வேண்டும் என்பதே, என் நோக்கம்.


அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?
எனக்கு நிஜமாகவே அரசியல் பற்றி தெரியாது. மற்றபடி, அரசியலில் எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும்.


தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
யாரும் என்னை கூப்பிட மாட்டார்கள். கூப்பிட்டாலும் போக மாட்டேன்.

மூலக்கதை