குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு

தினமலர்  தினமலர்
குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு

சேலம்:சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பு, 2018 – 19ல், சர்க்கரை உற்பத்திக்கு, 30.7 மில்லியன் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


கடந்த ஜனவரி இறுதி வரை, 18.5 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியானது. அதில், செலவினம் போக, தற்போது, 10.72 மில்லியன் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளது.கடந்த ஆண்டு, அக்டோபரில் துவங்கிய கரும்பு அரவை, வரும் மே இறுதியில் நிறைவு பெறுவதால், மேலும், 12.2 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.


நம் தேவை, 26 மில்லியன் டன் என்பதால், நாட்டில், சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில், கரும்பு நிலுவைத் தொகை, தற்போதைய, 20 ஆயிரம் கோடியில் இருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, சர்க்கரை ஆலைகள் கவலை தெரிவித்துள்ளன.அதனால், 1 குவிண்டால் அதாவது, 100 கிலோ சர்க்கரை கொள்முதல் விலையை, 2,900 லிருந்து, 3,500 ரூபாயாக உயர்த்த கோரி வந்தன.


இதையடுத்து, நேற்று மத்திய அரசு, 1 குவிண்டாலுக்கு, 200 உயர்த்தி, 3,100 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.இது குறித்து, மளிகை வியாபாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, சில்லரை விற்பனையில், 1 கிலோ சர்க்கரை, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, புதிய விலை உயர்வால், 38 ரூபாயாக அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., 5 சதவீதம், லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி உட்பட இதர செலவினங்களை சேர்த்து, அதிகபட்சம், கிலோவுக்கு, 3 ரூபாய்க்கு மேல் உயர்த்த வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை