பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்

தினமலர்  தினமலர்
பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இடம்பிடித்த படம் அடிமைப்பெண். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ஜே.பி.சந்திரபாபு, சோ, ஜோதிலட்சுமி, ராஜஸ்ரீ, பண்டரிபாய், ஓ.ஏ.கே.தேவர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்தார், அன்றைய பிரமாண்ட இயக்குனர் கே.சங்கர் இயக்கி இருந்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான படம். "ஆயிரம் நிலவே வா..." பாடல் இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. "அம்மா என்றால் அன்பு..." என்ற பாடல் மூலம் ஜெயலலிதாவும் பாடகியாக அறிமுகம் ஆனார். இதுதவிர "காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...", "தயாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை...", "உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...", "ஏமாற்றதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாற்றாதே...", போன்ற இனிமையான பாடல்களை கொண்ட படம்.

இன்றைக்கு பிரமாண்ட படமாக கொண்டாடப்படும் பாகுபலி படத்திற்கும் சற்றும் குறைவில்லாத படம் அடிமைப்பெண். இன்றைக்காவது கிராபிக்ஸ் வசதிகள் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத காலத்தில் பிரமாண்டமாக தயாரான படம். மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை மீட்கிறான். இதுதான் அடிமைப்பெண்ணின் கதை.

முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஒரு நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டார். இதற்காக அவர் அந்த சிங்கத்தை தனது வீட்டில் வளர்த்து அதனுடன் பழகினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.

அதேப்போல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் எம்.ஜி.ஆர் போடும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தனர். எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் இதில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். ஒரு எம்.ஜி.ஆர் கொல்லப்பட்டு விடுவார். எம்.ஜி.ஆர் இறப்பது போன்று நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

பாகுபலியை 3 ஆண்டுகள் எடுத்தார்கள். அடிமைப்பெண் 100 நாளில் எடுத்து முடிக்கப்பட்டது. சுமார் 50 லட்சத்தில் எடுக்கப்பட்ட அடிமைப்பெண் 3 கோடி வசூலித்தது என்பார்கள். 2017ம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டு, 50 நாட்களை தாண்டி ஓடியது. காலத்தால் அழிக்க முடியாத காவியம் அடிமைப்பெண். இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் படமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

மூலக்கதை