டிவிடெண்ட்-, பைபேக்: இவற்றில் எது சிறந்தது?

தினமலர்  தினமலர்
டிவிடெண்ட், பைபேக்: இவற்றில் எது சிறந்தது?

டிவிடெண்ட் கொடுப்பதா அல்லது, ‘பைபேக்’ எனும், பங்குகளை திரும்பப் பெறுவதா? எது சிறந்தது? ஒவ்வொரு தேர்விலும் யாருக்கு அதிக லாபம்? இது குறித்து முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல.இந்த முடிவை, வரி சட்டங்களை மட்டுமே வைத்து தீர்மானம் செய்யக் கூடாது. நிறுவன பங்குதாரராக தொடரும் முதலீட்டாளர்கள், எந்த விதத்திலும் இழப்பை சந்திக்காத வகையில், இந்த முடிவு அமைய வேண்டும்.ஆனால், இது தான் ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் சந்திக்கும் பெரிய சவால். அதாவது, பைபேக் மூலம் பங்குகளை விற்று வெளியேறுபவர்களை விட, விற்காமல், பங்குதாரர்களாக தொடர்பவர்கள் எந்த வகையிலும் நஷ்டம் அடைந்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு தவிர்க்க முடியாதது.வாரன் பபெட்சிறுபான்மை பங்குதாரர்களின் நன்மைகள் குறித்து, எப்படி நியாயமான முறையில் முடிவெடுப்பது... இது குறித்த சர்ச்சை, உலக அளவில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.டிவிடெண்ட் கொடுப்பதே இல்லை என்ற கொள்கை முடிவுடன், உலகின் மிகப் பெரிய பணக்கார முதலீட்டாளரான, வாரன் பபெட், தன்னுடைய, ‘பெர்க்‌ஷயர் ஹாதவே’ நிறுவனத்தை, 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவரின் இந்த முடிவை முதலீட்டாளர்களும் ஏற்கின்றனர்.இதற்கு என்ன காரணம்... நிகர லாபம், நிறுவனத்திடம் இருந்தால், அது வேகமாக வளரும் என்று கருதுவது தான். தங்களிடம் கொடுப்பதை விட, நிறுவனத்திடம் நிகர லாப பணம் இருப்பது, தங்களுக்கு சாதகமானது என சிறுபான்மை முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இது தான் காரணம். ஆனால், இது போன்ற நிலை இருப்பது மிக குறைவு.பல நிறுவனங்கள், ஆண்டு லாபத்தில் அதிக பணத்தை தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ளும் போது, தொடர்ந்து லாப வளர்ச்சி காண முடியாமல் தவித்து விடுவதும் உண்டு. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள், நிர்வாகம் தங்கள் பணத்தை ஒழுங்காக நிர்வகிக்க தவறி யதாகவே நினைப்பர்.இந்த சூழலில், டிவிடெண்ட் கொடுக்க தவறியதும், குறைவாக கொடுத்ததும், சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலனுக்கு பங்கம் விளைவிப்பதாகவே பார்க்கப்படும்.பைபேக் எப்போது செய்ய வேண்டும் என்பதிலும், பபெட் சில முக்கிய சிந்தனைகளை சந்தையில் புழங்க விட்டுள்ளார். நிறுவனத்தின் இயக்குனர் குழு, உபரி பணத்தை தன் வசம் வைத்திருப்பதை விட, அதை முதலீட்டாளர்களிடமே கொடுப்பது தான் நல்லது என்ற முடிவை, தாமாகவே முன்வந்து எடுக்க கடமைப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.டிவிடெண்ட் கொடுக்காத ஒருவர், இப்படி சொல்வது முரணாகத் தோன்றலாம். ஆனால், அவர் தன் வசம் வைத்துக் கொண்ட பணத்தை, முதலீட்டாளர்களால் பெருக்கக் கூடியதை விட அதிகளவில் பெருக்கி, மதிப்பு பெற செய்துள்ளார். அதே போல அவருடைய நிறுவன பங்குகளை விற்றவர்கள், அது குறித்து பிற்காலத்தில் வருந்திய வரலாறும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.அதிக பலம்ஆகவே, பைபேக் என்பது, நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் முறை மட்டும் அல்ல; முதலீட்டை தொடர்பவர்களுக்கு அதிக பலம் கொடுக்கும் முடிவும்கூட.தற்போது நிலவும் சூழலில், இந்திய பெரு நிறுவனங்கள், டிவிடெண்ட், பைபேக் என, இரு வழிகளிலும் முதலீட்டாளர்களை மகிழ்விக்கின்றன. ‘விப்ரோ, எச்.சி.எல்., இன்போடெக், டி.சி.எஸ்., இன்போசிஸ்’ போன்ற மென்பொருள் நிறுவனங்கள், பைபேக் அணுகுமுறையை கையாள்கின்றன. இது, தொடரும் முதலீட்டாளர்களையும், வெளியேறும் முதலீட்டாளர்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்து உள்ளது.

மூலக்கதை