தென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, ரீஜா ஹென்டிரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது ஹென்டிரிக்ஸ் (45) அவுட்டானார். அடுத்து வந்த வான் டெர் டுசன் (93) அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய ஆம்லா ஒருநாள் அரங்கில் தனது 27வது சதமடித்தார்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது. ஆம்லா (108), டேவிட் மில்லர் (16) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான், ஹசன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஹபீஸ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (25) சுமாரான துவக்கம் தந்தார். பாபர் ஆசம் (49) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பொறுப்பாக ஆடிய இமாம்–உல்–ஹக் (86) அரைசதம் கடந்தார். சோயப் மாலிக் (12), கேப்டன் சர்பராஸ் அகமது (1) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய முகமது ஹபீஸ், அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹபீஸ் (71), ஷதாப் கான் (18) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஆலிவியர் 2 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி டர்பனில் ஜன. 22ல் நடக்கவுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, தனது 27வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். இவர், 167 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 27வது சதமடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 169 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியது சாதனையாக இருந்தது.

மூலக்கதை