அன்னிய, ‘டேட்டா’ ஆதிக்கத்தை ரிலையன்ஸ் குறைக்கும் : மின்னணு வணிகத்தின் வடிவமைப்பை மாற்றும்

தினமலர்  தினமலர்
அன்னிய, ‘டேட்டா’ ஆதிக்கத்தை ரிலையன்ஸ் குறைக்கும் : மின்னணு வணிகத்தின் வடிவமைப்பை மாற்றும்

பெங்களுரு: ‘‘மின்னணு வணிகத்தில், அன்னிய நிறுவனங்களின், ‘டேட்டா’ ஆதிக்கத்தை குறைக்க, ரிலையன்ஸ் உதவும்,’’ என, ‘இன்போசிஸ்’ முன்னாள் தலைமை நிதி அதிகாரி, டி.வி.மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.‘ரிலையன்ஸ்’ குழுமம், விரைவில் மின்னணு வணிகத்தில் களமிறங்க உள்ளது. இது, இத்துறையில் கோலோச்சி வரும், ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட அன்னிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும்.அன்னிய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் டேட்டா எனப்படும் தரவுகளை, வெளிநாடுகளில் உள்ள, ‘செர்வர்’களில் சேமிக்கின்றன.இந்த தரவுகளை, இந்தியாவில் சேமிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை, ஒரு சில நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளன; பல நிறுவனங்கள், கால அவகாசம் கேட்டுள்ளன.நடவடிக்கைஇந்நிலையில், நேற்று முன்தினம், ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி, குஜராத், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும் போது, ‘‘இந்தியர்களின் தகவல்கள் இந்தியரிடமே இருக்க வேண்டும்.‘‘குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ள இந்தியரின் தரவுகளை, இந்தியாவிற்கு கொண்டு வர, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, வலியுறுத்தினார்.இது குறித்து, பெங்களூரில், மோகன்தாஸ் பாய் கூறியதாவது:ரிலையன்ஸ் குழுமம், அடுத்த தலைமுறைக்கான மின்னணு சில்லரை விற்பனை துறையில் கால்பதித்து, கடுமையான போட்டியை ஏற்படுத்த உள்ளது.இதன் மூலம், மின்னணு வணிகத்தின் வடிவமைப்பே மாறும்; வினியோகம் மேம்படும். விற்பனை பொருட்களின் விலை குறையும். இதனால், நுகர்வோர் பயனடைவர்.ஆர்ஜியோ, தேசிய அளவில் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இத்துடன், ரிலையன்ஸ், கண்ணாடி நாரிழை தடம் மூலம், இணைய வசதியும் அளிப்பது, மின்னணு சில்லரை விற்பனைக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். இத்தகைய, வலுவான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் ரிலையன்ஸ் களமிறங்குகிறது.மின்னணு வணிக நிறுவனங்கள், அவற்றின் சர்வதேச தொழில்நுட்ப வலைதளங்கள் மூலம், பொருட்களை வினியோகிக்கின்றன. எனினும், கடைநிலை பகுதிக்கும் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் தான், வெற்றி அடங்கி உள்ளது. இதில், ரிலையன்ஸ், அன்னிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும். அத்துடன், அன்னிய நிறுவனங்களின் தரவு ஆதிக்கமும், கட்டுக்குள் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.சலசலப்பு காத்திருக்குரிலையன்ஸ், மின்னணு வணிகத்தில் சலசலப்பை ஏற்படுத்தும். இத்துறை நிறுவனங்கள், அதிரடி தள்ளுபடிகள் மூலம், சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன. அவற்றின் மூலதனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், அதன் வளமான மூலதனம், தொழில்நுட்பம், வினியோகம் உள்ளிட்ட வசதிகள் மூலம், கடும் போட்டியாளராக உருவெடுக்கும்.டி.வி.மோகன்தாஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, இன்போசிஸ்

மூலக்கதை