எம்.எஸ்.எம்.இ., துறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி

தினமலர்  தினமலர்
எம்.எஸ்.எம்.இ., துறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி

எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற, 363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 111 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம்’ ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் வழியாக, புதிய தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை புதுப்பித்தல் போன்ற, தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும்.இதில் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எம்.எஸ்.எம்.இ., துறையில், 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்திய ஒன்பது மாதங்களில், இதுவரை, 363 சிறு, குறு நிறுவனங்கள், தொழில் துவங்க விண்ணப்பித்துள்ளன.

இதில், 252 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக, 843 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுஉள்ளது. மேலும், 16 ஆயிரத்து, 918 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீதம் உள்ள, 111 விண்ணப்பங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை