'துளசி'யிலிருந்து தூக்கிய 'தூக்குதுரை'

தினமலர்  தினமலர்
துளசியிலிருந்து தூக்கிய தூக்குதுரை

சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் நேற்றைய முதல் நாள் தமிழ்நாடு வசூலில் இந்தப் படம்தான் முதலிடத்தில் உள்ளது.

'விஸ்வாசம்' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன. நேற்று படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் 'விஸ்வாசம்' படம் 2007ல் வெளிவந்த 'துளசி' தெலுங்குப் படம் போல இருப்பதாகச் சொன்னார்கள்.

பொயப்பட்டி சீனு இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், வெங்கடேஷின் குடும்பம், சொந்த ஊரில் அடிதடி, பஞ்சாயத்து, பிரச்சினை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷும் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது. ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட, தன் மகனை அழைத்துக் கொண்டு வெங்கடேஷை விட்டுப் பிரிகிறார் நயன்தாரா. மருத்துவ ரீதியாக அவர்கள் மகனுக்கு பிரச்சினை இருக்க, அவரது உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார் வெங்கடேஷ். ஆபரேஷன் நடக்க இருக்கும் சமயத்தில் வில்லன் கோஷ்டி மகனைக் கடத்துகிறது. வெங்கடேஷ் மகனைக் காப்பாற்றி நயன்தாராவுடன் சேர்வதுதான் படத்தின் கதை.

'துளசி' படத்தின் கதையே சிலபல ஹிந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த 'துளசி' கதையிலிருந்து 'தூக்குதுரை' கதாபாத்திரத்தையும், அப்படத்தின் நயன்தாராவின் 'வசுந்தரா' கதாபாத்திரத்திலிருந்து 'நிரஞ்சனா' கதாபாத்திரத்தையும் உருவாக்கி 'விஸ்வாசம்' என உருவாக்கிவிட்டார் சிவா. 'துளசி'யில் மகன், 'விஸ்வாசத்தில்' மகள் என்பதும், அதில் வெங்கடேஷ் படித்தவர், இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும்தான் வித்தியாசம். 'துளசி' பாக்ஸ்ஆபிசில் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

மூலக்கதை