நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா?

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2019 சீசன், மார்ச் தொடங்கி மே மாதம் மத்தியில் வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

வீரர்களுக்கான ஏலமும் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.

இதனால் ஐபிஎல் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவிலேயே நடத்துவதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், ‘‘ஐபிஎல் போட்டி நடைபெறும் காலகட்டத்தில்தான் மக்களவை தேர்தலும் வருகிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டியுள்ளது.   இந்த ஐபிஎல் போட்டியை வெளிநாடுகளில் நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, ஐபிஎல் போட்டியை இந்தியாவிலேயே நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’’ என்றார்.

 
நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கும், ஐபிஎல் போட்டிக்கும் இடைவெளி இருக்கும் வகையில் போட்டிக்கான அட்டவணையை தயார் செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

கடந்த 2009, 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடந்தது.

போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்த காரணத்தால், சில போட்டிகள் தென்னாப்பிரிக்கா, அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. தற்போதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் ஐபிஎல் போட்டியும் நடத்தப்பட உள்ளதால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஐபிஎல் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தியாவில் நடைபெறவில்லை என்றால் தென்னாப்பிரிக்கா அல்லது  ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை