பெர்த் ஆடுகளம் ஆஸி.க்கு சாதகமாக இருக்கும்... ரிக்கி பான்டிங் கணிப்பு

தினகரன்  தினகரன்
பெர்த் ஆடுகளம் ஆஸி.க்கு சாதகமாக இருக்கும்... ரிக்கி பான்டிங் கணிப்பு

மெல்போர்ன்: இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பெர்த் மைதான ஆடுகளம் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணிக்கு அதிக சாதகமானதாக  இருக்கும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை பதிவு செய்ததால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த நிலையில், பெர்த் ஆடுகளம் குறித்து பான்டிங் நேற்று கூறியதாவது: அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இரு அணிகளுமே கடைசி வரை போராடியது பாராட்டுக்குரியது. இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இந்த வெற்றிக்கு தகுதியான அணி என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த தவறிவிட்டனர். வெற்றிக்கு மிக அருகே நெருங்கிய நிலையில் வாய்ப்பை தவறவிட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது. இதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பெர்த் மைதான ஆடுகளம் இந்திய வீரர்களை விட, ஆஸி. அணியினருக்கே அதிக பொருத்தமானதாக, சாதகமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆஸி. அணியில் மாற்றம் ஏதும் செய்யத் தேவையில்லை. ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களமிறங்கத் தகுதியானவர் தான். ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக பேட்டிங் வரிசையை மாற்றுவது சரியாக இருக்காது. அது போன்ற நடவடிக்கைகள் வீரர்களின் மன உறுதியை பாதிப்பதாகவே அமையும். மேலும், எந்த இடத்தில் களமிறங்குகிறோமோ அதற்கு ஏற்ப பயிற்சி முறையையும் மாற்ற வேண்டியிருக்கும். இது நிச்சயமாக பின்னடைவையே கொடுக்கும். எனவே அதிரடி மாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. பெர்த் டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும். இவ்வாறு பான்டிங் கூறியுள்ளார்.

மூலக்கதை