‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’

தினமலர்  தினமலர்
‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’

புதுடில்லி:‘‘கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர், ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:ஜி.எஸ்.டி., நடைமுறைகள் அனைத்தும், மின்னணு முறையில் நடைபெறுகின்றன. சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வேபில்’ கணினியில் தயாரிக்கப் படுகிறது. இருந்தபோதிலும், வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது.இந்தாண்டு, ஏப்ரல் – நவம்பர் வரையிலான, எட்டு மாதங்களில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில், 8,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.டி., செலுத்தும், 1.20 கோடி பேரில், 5 -– -10 சதவீதம் பேர் தான் வரி ஏய்ப்பு செய்கின்றனர். ஆனால், இது, பழைய வரி நடைமுறையின் போது இருந்ததை விட அதிகம். அதனால், வரி ஏய்ப்பை தடுக்க, ஜி.எஸ்.டி., நடைமுறையில் மேலும், சில திருத்தங்களை செய்ய வேண்டும். ஆளும் அரசுகளும், எதிர்க்கட்சிகளும் இணைந்து தான், ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தின. அதனால், ஆட்சி மாறினாலும், ஜி.எஸ்.டி., தொடரும். சில கொள்கைகள், நடைமுறைகள் மாறலாம். மலேஷியா போல, ஒரேயடியாக, ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை