இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் 'டாப்-10 தொழில் நுட்ப நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் டாப்10 தொழில் நுட்ப நிறுவனங்கள்

புதுடில்லி:இந்தியர்கள், பணியாற்ற விரும்பும் 'டாப் -10' தொழில்நுட்ப நிறுவனங்களில், மென்பொருள் துறையைச் சேர்ந்த, அடோபி சிஸ்டம்ஸ், முதலிடத்தை பிடித்துள்ளது.


இணையம் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை, 'இன்டீட்' நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம், தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் நிறுவனங்கள் குறித்து, அதன் வலைதளத்தில் கருத்து கணிப்பு நடத்தியது.அதில், அதிகமானோர் பணியாற்ற விரும்பிய நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.


இந்த பட்டியலில், 'டாப் -10'ல், மென்பொருள் துறையைச் சேர்ந்த, அடோபி சிஸ்டம்ஸ் நிறுவனம், பெரும்பான்மை வாக்குகளுடன், முதல் இடத்தை பிடித்துள்ளது.அடுத்த இடங்களில், என்விடியா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வந்துள்ளன. ௧௦வது இடத்தில், இஸ்ரோ என, சுருக்கமாக அழைக்கப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் உள்ளது. முதல், 10 இடங்களில் நுழைந்த, ஒரே பொதுத் துறை நிறுவனம், இதுவாகும்.


சாப், அகமய் டெக்னாலஜிஸ், விஎம்வேர், சிஸ்கோ, இன்டெல், சிட்ரிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவை, நான்கு முதல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளன. மைந்த்ரா, டி.சி.எஸ்., நிறுவனங்கள், 'டாப் - 15'ல் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, 'இன்டீட்' வெளியிட்டுள்ள அறிக்கை:முதல் ஐந்து இடங்களில், பன்னாட்டு நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. இது, தொழில்நுட்பத் துறையில், பணியில் முன்னேறும் வாய்ப்பு, மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழல் ஆகியவற்றுக்கு, இந்தியர்கள் முக்கியத்துவம் அளிப்பதை குறிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிறந்த பணி சூழல்


இந்தியர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதையும் தாண்டி, பணிச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்நிறுவனங்கள், ஊழியர்களிடம் மிகுந்த நம்பிக்கையுடன், விசுவாசமாக நடந்து கொள்கின்றன. அதனால், ஊழியர்கள், நிறுவனத்திற்காக பணியாற்றுவதாக கருதாமல், நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாக கருதுகின்றனர். இது, புதிய முதலாளித்துவ கலாசாரத்தையும், விசுவாசத்தையும் உருவாக்குகிறது.


- சசிகுமார், நிர்வாக இயக்குனர், இன்டீட் இந்தியா

மூலக்கதை