ஐ.டி.சி., நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள மோசடி

தினமலர்  தினமலர்
ஐ.டி.சி., நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள மோசடி

கோல்கட்டா:ஐ.டி.சி., நிறுவனத்தின் முத்திரையையும், அதன் தலைவர் பெயரையும் பயன்படுத்தி, போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பல்வேறு துறைகளில், வணிகம் செய்துவரும் மிகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்று, ஐ.டி.சி.,இந்நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.‘ஐ.டி.சி., ஹாலிடேஸ்’ எனும் பெயர் கொண்ட அந்த இணையதளத்தில், ஐ.டி.சி., நிறுவனத்தின் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் தலைவர்என, ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவரான ஒய்.சி.தேவேஸ்வர் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவேஸ்வர் இ – மெயில் முகவரி என வேறு போலியான முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர், நஸீப் அலி கூறியதாவது: கடந்த மாதம் தான் எங்களது கவனத்துக்கு இது வந்தது. அந்த இணையதளத்தில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பல்வேறு உயர்தர ஓட்டல்களுடன் கூட்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் நம்பிக்கையை பெறும்வகையில், ஐ.டி.சி., முத்திரையையும் தலைவர் பெயரையும் பயன்படுத்தி உள்ளனர்.இது குறித்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில் போட்டியில் உள்ளவர்கள் யாரும் இப்படி செய்திருப்பதாக நாங்கள் எண்ணவில்லை.நிச்சயம் குற்றவாளிகள் யார் என்பதை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள் என நம்புகிறோம். மேலும் யாராவது ஏமாந்திருக்கின்றாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை